எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பாசறை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தொகை மதிப்பு ஆணையாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று (07) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுச் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் உதவி தொகை மதிப்பு அத்தியட்சகருமான ரி. ஜெய்தனன் அவர்கள் தெளிவூட்டல் மற்றும் விளக்கங்களை வழங்கினார்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இச்செயற்பாட்டை முறையாக முன்னெடுப்பதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் பயிர்ச்செய்கை, கால்நடை மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டுவதற்கான TAB பயன்பாடு மற்றும் தரவு சேகரிப்பு முறைகள் குறித்தும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்களை வகுப்பதில் துல்லியமான புள்ளிவிபரத் தகவல்கள் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்துடன் கள மட்டத்தில் திரட்டப்படும் தரவுகள் எவ்விதப் பிழைகளுமின்றி நம்பகத்தன்மையுடன் பதிவு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பிரதி தொகை மதிப்பு ஆணையாளருமான திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதுடன், சிரேஷ்ட புள்ளிவிபர உத்தியோகத்தர்களான எம்.எஸ்.எம். ரூமி மற்றும் கே. கயல்வேந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.எம் மூர்ஷித், உதவி தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். சிவகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினர்.


