மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சமூகத்துறையுடன் தொடர்புடைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவட்டத்தில் உட்படுத்தல் கல்வியை (Inclusive Education) வலுப்படுத்தும் நோக்கில், வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உட்படுத்தல் கல்வியை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், புகலிட நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வது தொடர்பான ஊடகப் பிரச்சாரத்திற்கான வழிகாட்டல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்வியில் பின்தங்கும் மாணவர்களின் தேவைகளை சமூகத்திற்கு தெளிவாக எடுத்துரைப்பதிலும், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.