நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக் காணியில் அத்துமீறிய கட்டுமானங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தல்

திமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக் காணியில் இடம்பெறும் அத்துமீறிய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குறித்த காணிக்கு மின்சார இணைப்புகள் வழங்குவதும், அத்துமீறி அடைக்கப்பட்ட காணிகளில் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும் என்றும், தீர்ப்பு வரும் வரை புதிய கட்டுமானங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் கலந்துரையாடல்கள்:

கடைத்தொகுதி அமைக்கும் திட்டம்: சிறுகைத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை பிரதேச சபைக்கு வழங்கி கடைத்தொகுதி அமைக்கும் முன்மொழிவுக்கு அக்காணியை வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரச்சினையை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்குக் கொண்டு சென்று தீர்வைப் பெற வலியுறுத்தப்பட்டது.

வரலாற்று ஆதாரங்கள் மீளாய்வு: தமிழர்களின் வரலாறுகள் பாதுகாப்பக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், உலகநாச்சியார் கோவில் அகழ்வாராய்ச்சிக்கு முன்னர், ஹேமமாலா தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் மகாவம்சக் குறிப்புகளை உள்ளடக்கிய விரிவான மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஆளணி மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகள்: ஆயுர்வேத வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மட்டக்களப்பு கல்வியற் கல்லூரியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு, தீர்வுகளுக்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிக்கப்பட்டது.

பொதுமக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகள்: கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து மற்றும் காணி விவகாரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மக்கள் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதே முதன்மை நோக்கம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் மு. முத்துக்குமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.