உன்னிச்சையில் புதிய குடிநீர் உற்பத்தி உபநிலையம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

எல் நினோ தாக்கத்தின் காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள உன்னிச்சை பகுதி மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் உன்னிச்சைக் குளத்தை அண்டிய பகுதிகளில் வாழும் 3,000-க்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய குடிநீர் உற்பத்தி உபநிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சை பகுதியில் உள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருவதாகவும், குறித்த அபிவிருத்தித் திட்டப் பணிகள் அடுத்த வருடத்திற்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில், அமைச்சர் சுசில் ரணசிங்க உன்னிச்சை பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் குடிநீர் உற்பத்தி உபநிலையத்தின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சரின் கள விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் , பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த கால அரசாங்கங்களினால் பல வருடங்களாக இப்பகுதி மக்கள் குடிநீருக்காக காத்திருந்த போதிலும், தற்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் முயற்சியினால் புதிய குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.