சுவிஸ் மாகாணங்களின் KBM அச்சுறுத்தல் தடுப்பு முறை எப்படி செயல்படுகிறது?

Aarau-வில் இடம்பெற்ற கொடிய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற வன்முறைச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்காக சுவிஸ் மாகாணங்கள் பயன்படுத்தும் Kantonales Bedrohungsmanagement (KBM) – மாகாண அச்சுறுத்தல் மேலாண்மை முறை மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

ஒருவர் வன்முறையில் ஈடுபடுவதற்கு முன்பே, சில சந்தர்ப்பங்களில் அச்சுறுத்தல்கள் அல்லது சந்தேகத்திற்குரிய நடத்தை மூலம் எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தலாம். இதனை நிபுணர்கள் “Leaking” எனக் குறிப்பிடுகின்றனர். இத்தகைய அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, ஆபத்தின் அளவை மதிப்பிட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே KBM-ன் நோக்கம்.

பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக சேவை அலுவலகங்கள் போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்ற தொடர்பு நபர்கள் சந்தேகத்திற்குரிய நடத்தைகளை KBM நிபுணர் பிரிவுக்கு தெரிவிக்க முடியும். பின்னர் பல்வேறு அமைப்புகளிடம் உள்ள தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஆபத்து மதிப்பிடப்படுகிறது. தேவையான சூழலில், உடனடியாக குற்றவியல் நடவடிக்கைக்கு செல்லாமல் சம்பந்தப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்புகொள்ளவும் முடியும்.

முந்தைய குற்றச்செயல்கள், ஆயுதப் பயன்பாடு அல்லது ஆயுதங்கள் மீதான அதிக ஈடுபாடு, போதைப்பொருள் பயன்பாடு, மனநலப் பிரச்சினைகள் போன்றவை risk factors ஆக இருக்கலாம். இருப்பினும் stalking போன்ற ஒருவரின் நடைமுறை நடத்தைகளைக் கவனிப்பது மிகவும் முக்கியம் என forensic psychiatrist Marc Graf குறிப்பிடுகிறார்.

இந்த முறை தனிநபர் அடிப்படை உரிமைகள், தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். Forensic psychologist May Beyli-யின் விளக்கத்தின்படி, இதற்காக தனியான “ரகசியப் பதிவேடுகள்” அல்லது “shadow files” பராமரிக்கப்படுவதில்லை; ஒவ்வொரு வழக்கும் தனித்தனியாக மதிப்பிடப்படுகிறது.

Aarau சம்பவம் எழுப்பும் கேள்வி

Aarau சம்பவத்தின் சந்தேகநபர் Jura மாகாணத்தின் Montsevelier கிராமத்தில் தனிமையாக வாழ்ந்ததாகவும், தற்போதைய தகவலின்படி அவர் முன்னதாக அதிகாரிகளுக்குத் தெரிந்த நபராக இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வளவு தீவிரமான வன்முறைச் சம்பவத்தில் ஈடுபடும் ஒருவர் காவல்துறைக்கு முற்றிலும் அறியப்படாதவராக இருப்பது மிகவும் அரிதானது என Marc Graf தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி, ஒருவரிடம் ஆபத்தான அல்லது மிகவும் பிரச்சினைக்குரிய நடத்தை தென்பட்டால் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதில் பொதுமக்களுக்கும் ஒரு பங்கு உள்ளது.