கிண்ணியா சின்ன மகமார் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர் குடிநீர் விநியோகம்

ஹஸ்பர் ஏ ஹலீம் –

எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம் இடம் பெற்றன.

நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனையடுத்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அவசர தேவையாக குடிநீர் பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட தேவைகளுக்குக் கூட நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்த மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து வறட்சி நிலை நீடிக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்