ST. MARGRETHEN SG | 29.08.2026
St. Gallen மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
St. Margrethen ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிக்கரில் சுவிஸ் சின்னத்துடன், அரபு மொழியில் “உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்; உங்களுக்கு இங்கு வரவேற்பில்லை; இது எங்கள் நாடு” என்ற பொருள்படும் வாசகம் இடம்பெற்றிருந்தது.
ஒரே ஸ்டிக்கர் பல இடங்களில்
St. Margrethen மட்டுமின்றி Rebstein மற்றும் Altstätten SG பகுதிகளிலும் இதே வடிவிலான ஸ்டிக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை ஒட்டியது யார் என்பது இதுவரை தெரியவில்லை. St. Gallen மாகாண பொலிஸாரின் விசாரணைகளிலும் இதுவரை சந்தேக நபர்கள் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
SBB கடும் நிலைப்பாடு
தமது ரயில் நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகளில் இனவெறி, பாகுபாடு மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை சகித்துக்கொள்ள மாட்டோம் என SBB தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஸ்டிக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை விரைவாக அகற்றப்படுவதுடன், குற்றவியல் சட்டத்திற்குட்பட்ட உள்ளடக்கம் இருந்தால் பொலிஸில் புகாரும் அளிக்கப்படும்.
⚠️ பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இத்தகைய ஸ்டிக்கர்களைக் கண்டால் நீங்களாகவே அவற்றை அகற்ற வேண்டாம் என SBB கேட்டுக்கொண்டுள்ளது.
ரயில் நிலையம் அல்லது பொதுப் போக்குவரத்துப் பகுதியில் கண்டால்:
☎️ Transportpolizei – 0800 117 117
என்ற எண்ணுக்கு தகவல் வழங்கலாம். பொது இடங்களில் இருந்தால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிவிக்கலாம்.
SUPEEDSAM e-Paper


