மட்டக்களப்பு கொம்மாதுரை சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில், அக்கழகத்திற்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவும், அவரின் ஒருங்கிணைப்பின் ஊடாகவும் இலங்கை கிரிக்கெட் சபையினால் (Sri Lanka Cricket) இவ்விளையாட்டு உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், “கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்குத் தேவையான வளங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும் தொடர்ந்தும் முன்னுரிமை வழங்கப்படும். திறமையான இளைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும், கிராமப்புறங்களில் விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதும் சமூகப் பொறுப்பின் முக்கியமான பகுதியாகும்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான நாகேந்திரன், நிலாந்தன் ஆகியோருடன், அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொம்மாதுரை வட்டாரத்திற்கான பட்டியல் வேட்பாளராகப் போட்டியிட்டவரும், சுடர் ஒளி விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினருமான அசோக் உட்பட கழகப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கான இத்தகைய ஆதரவுச் செயல்பாடுகள் வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.


