( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது.
நேற்று (24) திங்கள் கிழமை பட்டப்பகலில் காரைதீவு மேற்கு வயல் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் பட்டாளமாக மேய்ந்து கொண்டிருந்தது. பெரும் யானைகளும் இருந்தன.
பிரதான வீதியால் பயணித்தவர்கள் அதனை கண்டுகளித்தனர்.
எதிர்வரும் விதைப்பு காலம் வரை இந்த யானைகளின் அட்டகாசம் மேலும் தொடரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
விளைந்த நெல் வயல்களை அழிப்பதும் மனிதர்களை கொல்வதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் நடவடிக்கைகள் குறைவாக உள்ளது.
விவசாயி சுரேஸ் கூறுகையில்:காரைதீவை அண்டிய ஏனைய கமநல சேவை மத்திய நிலையத்திற்கு உட்பட்ட வயற்காணிகளில் யானை காவலுக்கு ஆட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான வேதனம் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்டு வழங்கப்படுகின்றது.
ஆனால் காரைதீவு கமநலசேவை மத்திய நிலையத்திற்கு உட்பட்ட வயற் காணிகளில் யானை காவலுக்கு என எவரும் அமர்த்தப்படாததால் வயலில் நெற்கதிர்கள் சரியாக முதிர்வதற்கு முதல் நெல் அறுவடை இடம் பெற்று வருகின்றது. இதனால் விவசாயிகள் பீடைத் தாக்கத்திலிருந்து நெற் கதிர்களை பாதுகாத்தும் கூட உரிய விளைச்சலை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து எதிர்காலத்திலாவது சரியான தீர்வை விவசாயிகளுக்கு வழங்குமாறு வேண்டுகின்றோம். என்றார்.


