சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21) மாலை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு, காலில் ஏற்பட்ட ‘வெரிகோஸ்’ (Varicose veins) நரம்புப் பாதிப்பு காரணமாக நரம்பொன்று வெடித்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சேவைப் பெறுநரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுகீஸ்வர பண்டாரவின் சட்டத்தரணிகள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் உள்விவகாரம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பாக நேரடி உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இது தொடர்பான கோரிக்கையை நேரடியாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் முன்வைக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேகச் செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தில் விசேட திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகவும் இவர் பணியாற்றினார்.

22 கோடி ரூபாவுக்கும் அதிகமான அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் நம்பிக்கை துரோகம் இழைத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.