எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாயக் குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது.
இதன்போது, 2026/2027 ஆம் ஆண்டுக்கான பெரும்போகச் செய்கை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அவர்களை வலுப்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள், விவசாயக் காப்புறுதி, குளங்களை அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி செய்தல், மற்றும் வாய்க்கால் புனர்நிர்மாணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகவும், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
விதை நெல் வழங்கள், பயிர்ச்செய்கைக்கான உரம் வழங்குதல், யானை மனித மோதல்கள், நஷ்டஈடு வழங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல குளங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், எதிர்வரும் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். யோகராஜா, விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மத்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர், மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பிரதேச செயலாளர்கள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் அதிகாரிகள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


