( வி.ரி.சகாதேவராஜா)
வைத்தியசாலையில் சீருடை முறைமை ஏன் கொண்டுவரப்பட்டது?
வருகின்ற நோயாளிகளுக்கு மிக நம்பிக்கையாக சேவை வழங்கவேண்டிய சேவை வழங்குனர்கள், தங்கள் அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலையின் அடிப்படையில்தான் இந்த சீருடை முறைமைகள் இந்த சுகாதாரத்துறையிலே கொண்டுவரப்பட்ட என்பதை நாம் ஏற்று கொள்ளவேண்டும்.
இவ்வாறு, இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இளையதம்பி ஸ்ரீநாத் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்..
அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாகவும் பேசவேண்டிய தேவை இருக்கின்றது. மிக முக்கியமாக இன்றைய காலகட்டத்திலே இனங்களுக்கு இடையிலான சமத்துவமும் உரிமை பேணப்படுதலும் அவர்களுடைய மதங்களை கொண்டு வருகின்ற விடயங்களும் மிக முக்கியமானவை உணர்வுபூர்வமானவை.
அந்த விடயத்திலே இன்று மிக அவசரமாக சுகாதார அமைச்சினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நாம் வரவேற்கின்றோம். ஏனென்றால் அந்த பிரதேசத்திலே ஒரு இன முறுகல் வராமல் அதை பாதுகாத்து அவருடைய பிரத்தியகமான செயல்முறையின் ஊடாக அதொரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
உண்மையில் சுகாதாரத்துறையை பொறுத்தளவிலே, சுகாதாரத்துறையில் வேலைசெய்தவர் என்ற அடிப்படையிலே சில விடயங்களை நான் சொல்லவேண்டிய தேவை இருக்கின்றது.
சுகாதாரத்துறையானது நோயாளிகளுக்கு ஒரு சமச்சீரான, ஒரு எதிர்பார்ப்புடன் வருகின்றவர்களுக்கு நம்பிக்கையாக சேவை வழங்கவேண்டிய இடம் இருக்கின்றது.
உண்மையிலேயே நாங்கள் கற்ற காலத்திலே மிகப்போர் நடந்து கொண்டிருந்த சூழல். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே ஒரு வைத்திய விடுதியிலே ஒரு இராணுவ வீரரும் விடுதலைப்புலிகளும் மிகப்பக்கத்திலே இருந்து சேவைகளைப் பெற்றுக்கொண்டிருந்த நேரத்திலே எனது வைத்திய நிபுணர்கள் சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன.
இவர்கள் இரண்டுபேரும் வெவ்வேறு மொழிகளாக இருந்தாலும், வெவ்வேறு இனங்களாக இருந்தாலும் உங்களுடைய சேவைகள் சமச்சீராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அந்த விடயங்கள் மனதிலே பசுமையாக இன்னும் பதிந்திருக்கின்றன.
இந்த சீருடை விடயங்களிலே பல பிரச்சினைகள் இருந்தால், அவற்றை அந்த உரிய அமைச்சரிடம் விண்ணப்பங்களாக வைத்து கடந்தகாலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளை தீர்ப்பதற்கு உரிய முறைகள் பின்பற்றப்படவேண்டும்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடந்த நிகழ்வை ஒரு பாரிய இன முறுகலாக அல்லது இனமத பேத பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல் இந்த முகநூல் அல்லது சோஷியல் மீடியாக்கள் இதை கையாண்டிருக்கவேண்டும்.
சரி அவர்கள் தான் கையாண்டிருந்தால் கூட, அதை பின்பற்றி அரசியல்வாதிகள் இங்கு கொண்டுவந்த நடைமுறைகள் மிக மோசமானவை.
அதை அந்த இடத்திலே கதைத்து பேசி ஒரு விடயத்திலே உரிய நடைமுறையை பின்பற்றாமல் அதை ஒரு பெரிதுபடுத்தி மிக மோசமான முறையில் வைத்தியசாலை நிர்வாகத்தை இதில் குற்றம் சாட்டுவது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயம்.
உண்மையில் வைத்தியசாலைப் பணிப்பாளர் அல்லது வைத்தியசாலை நிர்வாகத்தினர் எந்த அடிப்படையில் செயற்ப்படுகின்றார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட தாபன விதிகோவையிலும் சுற்றறிக்கைகளின் அடிப்படையிலுமே அவர்கள் செயற்ப்பாடுகளை முன்னெடுக்க வேண்டி இருக்கின்றது.
அரசியல் அமைப்பிலே அடிப்படையான உரிமைகள் இருக்கின்றது.
இலங்கையிலே அரசியலிலே போட்டியிடுவதற்கு, அரசியல் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருந்தாலும் உயர்மட்ட பதவிகளில் அரசியல் ஈடுபடமுடியாது என்று தாபன விதிகோவை சொல்லுகின்றது.
அந்த அடிப்படையிலே அதை மீறுபவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதை நாம் கண்கூடாக கண்டிருக்கின்றோம்.
ஆகவே இந்த நடைமுறைகளை பின்பற்றி கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் எடுத்த முடிவுகளை, அதை உரிய முறையிலே விண்ணப்பித்து மிக அவசரமாக மிகத் தெளிவாகச் சொன்னார், நீங்கள் அதை விண்ணப்பித்து சமகாலத்திற்கு ஏற்றமாதிரி இந்த சீருடைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டிய தேவை ஏற்படும் பொழுது அதை தேசிய ரீதியிலே செய்வதற்குரிய ஏற்பாடுகளை நாம் செய்வோம்.
இன்று இருக்கின்ற நிலைமைகளை சமாளித்து நாம் இன முறுகலை இல்லாமல் செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதை நாம் எல்லோரும் ஒத்துக்கொண்டு உடன்பட்டதை வரவேற்கவேண்டிய தேவை இருக்கின்றது.
ஆகவே இந்த விடயத்திலே மிக பொறுப்புடன் இந்த அரசியல்வாதிகள் குறிப்பாக சிறுபான்மையின அரசியல் கட்சிகள் மிக பொறுப்புடன் இன முறுகல் இல்லாமலும் நடந்திருக்கவேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
இவர்கள் தங்களுக்குள்ளே பேசி இந்த இதற்கான ஒரு முடிவை பொதுவாக அறிவித்திருக்கவேண்டும். அதை அமைச்சரிடம் திணைக்களத்தின் ஊடாக கொண்டுசெல்வதன் ஊடாக இந்த பிரச்சினை பாரிய அளவில் வராது தடுத்திருக்கமுடியும்.
உண்மையில் பல விடயங்கள் கல்முனையை பொறுத்தவரை பல விடயங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மிக உதாரணமாக கல்முனையில் கல்முனை வடக்கு பிரதேசத்திலே ஒரு கணக்காளரை நியமிப்பதற்கு இவர்கள் எல்லோரும் ஒருமித்து ஒரு கருத்தாக சொல்வதற்கு உடன்படுகின்றார்களா? என்ற வினாவையும் நான் இவிடத்தில் வைக்க விரும்புகின்றேன்.
ஆகவே பொதுவான விடயங்களை, சிறுபான்மையினருக்கான உரிமைகளை, மதத்திற்கான உரிமைகளை நாம் கையாளுகின்ற பொழுது அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி மிக மிகக் கவனமாக, மிக பொறுப்புடன் கடந்தகாலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள் ஏற்படாத வகையிலே உரிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.
பல்வேறு இடங்களிலே நான் கண்கூடாக கண்ட விடயங்கள் பல இடங்களிலே தமிழ் பெண்கள் கூட பல இடங்களிலே பொட்டு வைத்துக்கொண்டு வேலை செய்வதற்கான நெருக்கடிகள் இருக்கின்றன.
முயற்சி செய்து ஒன்றுபட்ட சமூகமாக சமத்துவத்துடன் எல்லோருக்கும் அங்கு சமநீதி கிடைக்கக்கூடிய வகையிலே மத சுதந்திரத்தையும் பாதுகாக்கக்கூடிய வகையிலே இனத்தையும் நாம் மிக கவனமாக பாதுகாத்துக்கொண்டு செல்லவேண்டும் என்ற ஒரு வினாவையும் வைத்துக்கொண்டு நன்றி கூறி விடைபெறுகின்றேன் . என்றார்.


