( வாஸ் கூஞ்ஞ) 20.08.2026
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும் மன்னார் மாவட்ட கலை- பண்பாட்டுப் பேரவையும் இணைத்து நடாத்தpய கலை பண்பாட்டுப் பெருவிழாவானது நேற்று வியாழக்கிழமை (20.08.2026) காலை 9.00 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்விழா மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் பிரதான பாலத்தடியில் இருந்து மிகவும் விமரிசையான முறையில் மன்னார் மண்ணின் மணம் கமழும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கலை பண்பாட்டுடன் தமிழர்களின் பழமையான கலாச்சாரங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்தியம்பும் வகையில் மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களான மன்னார் நகரம்- மாந்தை மேற்கு- மடு- நானாட்டான் மற்றும் முசலி ஆகிய ஐந்து பிரதேசப் பிரிவுகளும் தங்களின் தனித்துவத்துடன் பதாகைகளுடன் அணிவகுத்து வந்தனர்.
மறைந்து போகின்ற பாரம்பரியத் தொழில்களும்- கலைகளும் இந்த ஊர்வலத்தின் ஊடாக ஒவ்வொருவரும் கண்டு கழிக்கவும் சிந்திக்கவும் தமிழர்களின் பாரம்பரியங்களை உணர்ந்து கொள்ளும் முகமாக இந்த ஊர்வலம் தத்தருவமாக அமைந்திருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
பனைத் தொழில்- கடல் தொழில் மன்னார் மக்களின் பிரதான வாழ்வாதாரங்களை விளக்கும் காட்சிகள் விவசாயம் மற்றும் கிராமிய வாழ்க்கை முறைகளை இன்றைய இளைய தலைமுறைகள் சிந்திக்க தூண்டும் விதத்திலும்
அம்மியே தெரியாதிருக்கும் இன்றைய இளம் சமூகத்திற்கு ‘அம்மியில் அரைத்தல்’ மற்றும் ‘உலக்கையைப் பாவித்து நெல் குத்துதல்’ போன்ற கிராமிய வாழ்வியல் முறைகள் நேரில் நடித்துக் காட்டப்பட்ட செயற்பாடுகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
அத்துடன் பழங்காலக் கலைகள் கரகாட்டம் உடுக்கை அடித்தல் பறை மற்றும் பலவிதமான பழங்கால இசை வாத்தியக் கருவிகளின் முழக்கத்துடன் கலைஞர்கள் ஆடிய நடனங்களும் செயல் வடிவமாக அமைந்திருந்தன.
பாலத்தடியில் ஆரம்பமாகிய இந்தக் கண்கவர் கலாச்சாரப் பண்பாட்டுப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கலை நிகழ்ச்சி நடைபெற்ற மன்னார் நகர சபை மண்டபத்தை அடைந்தது
இந்நிகழ்விற்கு தலைமை அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் அவர்களும் பிரதம விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் திருவாட்டி தனுஜா முருகேசன்- சிறப்பு விருந்தினராக மன்னார் நகரபிதா ஏ.டீ.பி. டானியல் மற்றும் ஏனைய கல்வித்துறைசார் விருந்தினர்கள்- விசேட விருந்தினர்கள்- கலை விருந்தினர்கள்- கலைத்துறைசார் விருந்தினர்கள்- கலை ஆர்வமுள்ளவர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் குழு இசை- குழு நடனம்- களிகம்பு- பல்லியம் மற்றும் ஏனைய சிறப்பான கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன. அத்தடன் ‘மன்னெழில் – ஐஏ’ என்ற சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது. இறுதியாக கலைஞர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன


