எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட பாரிசவாத (பக்கவாத) புனர்வாழ்வு மையம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடல், உளவியல், சமூக மற்றும் செயற்பாட்டு ரீதியான ஒருங்கிணைந்த புனர்வாழ்வு சேவைகளை வழங்கி, அவர்களை மீண்டும் தன்னம்பிக்கையுடனும் சுயாதீனமாகவும் சமூகத்துடன் இணைந்து வாழச் செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
பக்கவாதம் – வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பாதிக்கும் நிலை
பக்கவாதம் (Stroke) என்பது ஒருவரது உடல் இயக்கத்திறன், பேச்சுத்திறன், அன்றாட செயற்பாடுகள், உளநலம் மற்றும் சமூக வாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கிய சுகாதார நிலையாகும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆரம்ப சிகிச்சையைப் பெற்ற பின்னரும், அவருக்கு தொடர்ச்சியான புனர்வாழ்வு மற்றும் முறையான பராமரிப்பு கிடைக்காவிட்டால் கை, கால் பலவீனம், முகச்சரிவு, நடமாட்டச் சிரமம், பேச்சுக் குறைபாடு மற்றும் அன்றாட பணிகளைத் தானாகச் செய்வதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீடிக்கக்கூடும்.
புனர்வாழ்வு சேவையில் காணப்பட்ட இடைவெளியை நிரப்பிய மையம்
பொதுவாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பகட்ட சிகிச்சைகளைப் பெற்ற பின்னர் வீடு திரும்புகின்றனர். ஆனால், அதன் பின்னர் தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட புனர்வாழ்வு சேவைகளைப் பெறுவதில் காணப்பட்ட இடைவெளி காரணமாக, பல நோயாளிகள் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்தத் தேவையை கருத்திற்கொண்டு, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுடனும் IMHO நிறுவனத்தின் ஆதரவுடனும், ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாரிசவாத புனர்வாழ்வு மையம் நிறுவப்பட்டது.
இம்மையம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
அனைவருக்கும் இலவசமான புனர்வாழ்வு சேவை வழங்கப்பட்டுவருகின்றது.
பக்கவாத நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான உணர்வுபூர்வமான, உளவியல் மற்றும் சமூக ஆதரவை வழங்கி, அவர்களது மீட்புப் பயணத்தை இலகுவாக்குவதே இம்மையத்தின் பிரதான நோக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பக்கவாத நோயாளிகள் சமூக அல்லது பொருளாதார வேறுபாடுகளின்றி, இம்மையத்தின் இலவச புனர்வாழ்வு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருங்கிணைந்த புனர்வாழ்வு சேவைகள்
நோயாளிகளின் உடல் மற்றும் உளச் செயற்பாட்டுக் குறைபாடுகளைக் குறைத்து, அவர்களை அதிகபட்ச சுயாதீன நிலைக்கு கொண்டு வருவதற்காக இம்மையத்தில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
உடற்திறன் சிகிச்சை (Physiotherapy)
தசை வலிமை, சமநிலை, நடமாட்டம் மற்றும் உடல் இயக்கத்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தொழில்சார் சிகிச்சை (Occupational Therapy)
உணவு உண்ணுதல், உடை அணிதல், குளித்தல், எழுதுதல் உள்ளிட்ட அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளை மீண்டும் சுயமாக மேற்கொள்ள தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை (Speech and Language Therapy)
பேச்சு, மொழி மற்றும் தொடர்பாடல் திறன்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை மேம்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
உளவியல் ஆதரவு
பக்கவாதத்திற்குப் பின்னர் ஏற்படக்கூடிய மன அழுத்தம், தன்னம்பிக்கைக் குறைவு உள்ளிட்ட உளவியல் சவால்களை எதிர்கொள்ள ஆலோசனைகள் மற்றும் ஆதரவு வழங்கப்படுகின்றன.
குடும்ப வழிகாட்டல்
நோயாளியை வீட்டில் எவ்வாறு பராமரிப்பது, தேவையான உதவிகளை எவ்வாறு வழங்குவது மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளை எவ்வாறு தொடர்வது என்பது தொடர்பில் குடும்ப உறுப்பினர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன.
ஆயுர்வேத வைத்திய சேவை மற்றும் தேவைக்கேற்ப விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
பல்துறை நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு
இம்மையத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நரம்பியல், மூட்டுவாதம், உளநலம் மற்றும் ஏனைய தொடர்புடைய மருத்துவத் துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகளுடன், உடற்திறன் சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை, ஆயுர்வேத சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.
தேவைக்கேற்ப ஒட்டுறுப்பு மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை (Plastic Surgery) உள்ளிட்ட விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
நோயாளிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றம்
முறையான புனர்வாழ்வு மூலம் நோயாளிகளின் உடல் இயக்கத்திறன் படிப்படியாக மேம்படுவதுடன், பிறரைச் சார்ந்திருக்கும் நிலை குறைந்து, தங்களது அன்றாட பணிகளை தாமாகவே மேற்கொள்ளும் திறன் அதிகரிக்கின்றது.
இதன் மூலம் நோயாளிகளின் தன்னம்பிக்கை மற்றும் உளநலம் மேம்படுவதுடன், அவர்கள் தமது குடும்பத்துடனும் சமூகத்துடனும் மீண்டும் அர்த்தமுள்ள முறையில் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பும் உருவாகின்றது.
இம்மையத்தின் ஊடாக இதுவரை கணிசமான எண்ணிக்கையிலான பக்கவாத நோயாளிகள் புனர்வாழ்வு சேவைகளைப் பெற்று, தங்களது உடல் செயற்பாடுகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளனர்.
மையத்தின் ஒருங்கிணைந்த சுகாதாரக் குழு
இப்புனர்வாழ்வு சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதில் பின்வரும் வைத்தியர்கள், சிகிச்சை நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர்:
1. வைத்தியர் சீவரத்தினம் ரவிச்சந்திரன் – பொறுப்பு வைத்திய அதிகாரி
2. வைத்தியர் ஏ. குணராஜசேகரம் – முன்னாள் பொறுப்பு வைத்திய அதிகாரி
3. வைத்தியர் மு. இளஞ்செழியபல்லவன் – ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணர்
4. வைத்தியர் ஆ. பிறவின்சன் – பல்துறை வைத்திய நிபுணர்
5. வைத்தியர் (திருமதி) S.I.F. இர்ஃபானா
6. வைத்தியர் M. றுதீசன் – தொற்றா நோய்கள் பிரிவு வைத்திய அதிகாரி
7. வைத்தியர் தனபாலசிங்கம் அருணன் – ஆயுர்வேத வைத்திய அதிகாரி
8. திரு. S. இன்பராஜா – உடற்திறன் சிகிச்சை நிபுணர்
9. திருமதி D.W. திலினி வெலிகல – பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை நிபுணர்
10. திரு. தனநாயகம் ஜுவராஜ் – தொழில்சார் சிகிச்சை நிபுணர்
11. திரு. மொஹமட் ஸக்கி பாத்திமா நுவைசா – தொழில்சார் சிகிச்சை நிபுணர்
12. திருமதி ராஜகுமாரி இளங்கோ – தாதிய சகோதரி
13. திரு. M.N.M. பரகத்துல்லாஹ் – தாதிய உத்தியோகத்தர்
14. திரு. கிருஷ்ணபிள்ளை யதீசன் – தாதிய உத்தியோகத்தர்
15. திருமதி கௌசல்யா விதுஜன் – தாதிய உத்தியோகத்தர்
16. திருமதி பிறின்ஸ் அன்ட்ரூ கஜேந்தினி – தாதிய உத்தியோகத்தர்
17. திரு. முத்துலிங்கம் ரவீஸ்வரன் – மேற்பார்வையாளர்
18. திரு. செல்வராஜா சசிகரன் – சுகாதார உதவியாளர்
19. திருமதி சுமங்கலி வேதநாயகம் – சுகாதார உதவியாளர்
20. செல்வி மயில்வாகனம் கோசலாதேவி – சுகாதார உதவியாளர்
21. திரு. சிவசிங்கம் விஸ்வநாதன் – சுகாதார உதவியாளர்
பக்கவாதம் முற்றுப்புள்ளி அல்ல – புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு
“பக்கவாதம் என்பது வாழ்க்கையின் முற்றுப்புள்ளி அல்ல; சரியான சிகிச்சையும் தொடர்ச்சியான புனர்வாழ்வும் கிடைத்தால் அது ஒரு புதிய தொடக்கமாக அமையும்.”
ஆரையம்பதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட பாரிசவாத புனர்வாழ்வு மையம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் ஒரு முக்கிய சுகாதார சேவை மையமாகத் திகழ்கின்றது.
நோயாளியை மட்டும் மையப்படுத்தாமல், அவர்களின் குடும்பத்தினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், பக்கவாதத்திற்குப் பின்னரும் கண்ணியமான மற்றும் சுயாதீனமான வாழ்க்கையை நோயாளிகள் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இம்மையம் வழிவகுக்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு
மட்டக்களப்பு மாவட்ட பாரிசவாத புனர்வாழ்வு மையம்
ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலை வளாகம்
தொடர்பு தொலைபேசி இலக்கங்கள்:
074 077 9306
075 773 5960


