சம்மாந்துறையில் இடம்பெறவுள்ள விசேட வீதித் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவது மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.பி.ரத்நாயக்க நேற்று (06) சம்மாந்துறைக்கு நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்ததுடன் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிருடன் கலந்துரையாடினார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபாதை அபிவிருத்திப் பணிகள் பார்வையிடப்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதசாரிகளின் வசதியைக் கருத்திற்கொண்டு நடபாதையை மேலும் விஸ்தரித்தல். மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களின் பாதுகாப்பிற்காகத் தனியான பாதையொன்றை அமைத்தல். ஹிஜ்றா சந்தி சுற்றுவட்டப் பகுதியை நவீன முறையில் அபிவிருத்தி செய்தல். ஹிஜ்றா சந்தியிலிருந்து அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி வரையிலான வீதியை நான்கு வழிப்பாதையாக அமைத்தல் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளும், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு இந்த அபிவிருத்திப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினையும் கருத்திற்கொண்டு தவிசாளர் மாஹிர் மேற்கொண்டுவரும் முயற்சிக்கு சம்மாந்துறை பிரதேச மக்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.