( வாஸ் கூஞ்ஞ)
“இலங்கை அரசே! எமது பூர்வீக நிலங்களை உடனடியாக எம்மிடம் ஒப்படையுங்கள்!”
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியும், நீண்டகாலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், 2026 ஆகஸ்ட் 7 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டம், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக இடையறாது போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிகழ்வு காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுவதுடன், இதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவு MSEDO (Mannar Social and Economic Development Organization) அமைப்பினால் வழங்கப்படுகிறது.
எனவே, மனித உரிமைகள், காணி உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து சிவில் சமூக அமைப்புகள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் தங்களது மேலான பங்களிப்பை வழங்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்
அத்துடன், மன்னாருக்கு வர இயலாத நண்பர்கள் மற்றும் அமைப்புகள் தங்களது மாவட்டங்களில்—குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் ஆதரவு கவனயீர்ப்பு போராட்டங்களில் பங்கேற்று, நில உரிமைக்காகப் போராடும் மக்களின் நீதியான கோரிக்கைக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
நிலத்தை இழந்த மக்களின் நீதி, உரிமை மற்றும் கண்ணியத்திற்கான இந்த அமைதியான ஜனநாயகப் போராட்டத்தில் உங்கள் பெறுமதியான பங்களிப்பு மிகவும் பெறுமதியானதாக இருக்கும்.
ஒன்றிணைவோம் – உரிமைக்காக குரல் கொடுப்போம்! எனவும் இதற்க்கான ஒழுங்கமைப்பை மேற்கொண்டுள்ள மெசிடோ நிறுவனம் வேண்டியுள்ளது


