இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம்

ஹஸ்பர் ஏ.ஹலீம்-
இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. விக்ரம் மிஸ்ரி அவர்கள் 2026 ஆகஸ்ட் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்தார். வெளியுறவுச் செயலாளராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட முதல் தனிப்பட்ட உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் இலங்கை விஜயத்தின்போதும், 2026 ஏப்ரலில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் விஜயத்தின்போதும் இந்திய பிரதிநிதிக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.

விஜயத்தின் போது வெளியுறவுச் செயலாளர் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்தார். மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களையும் சந்தித்ததுடன், இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர் (IOT) சமூகத் தலைவர்களுடனும் தனித்தனியாக கலந்துரையாடினார்.


சந்திப்புகளின் போது, Neighbourhood First கொள்கை மற்றும் Vision MAHASAGAR ஆகியவற்றின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் உறுதியான அர்ப்பணிப்பை வெளியுறவுச் செயலாளர் மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

டிட்வா (Ditwah) சூறாவளி பாதிப்புகளைத் தொடர்ந்து இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தரப்பும் திருப்தி தெரிவித்தன. குறிப்பாக, இரயில்வேத் திட்டங்களுக்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் வசதியும், கால்நடை வளர்ப்பு மற்றும் பிற முன்னுரிமைத் தேவைகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் வசதியும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவு பெற்றமை வரவேற்கப்பட்டது.

இந்தியாவின் EXIM வங்கி மற்றும் இலங்கை நிதி அமைச்சுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள், இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் இலங்கை திறைசேரி செயலாளரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் கீழ் சேதமடைந்த வீடுகளை மீள்கட்டமைத்தல் மற்றும் நிரந்தரப் பாலங்களை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2026 ஜூலை 13 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட இடமாற்றம் செய்யப்பட்ட தெனியாய வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், இலங்கை முழுவதும் மருத்துவ கியோஸ்க்கள் அமைத்தல், கல்வி நிறுவனங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் நாடு முழுவதும் பேரிடர் முன்எச்சரிக்கை அமைப்பை நிறுவுதல் போன்ற திட்டங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், 5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் கீழ் வடக்கு இரயில்வே பாதை புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தொடருந்து சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறித்து இரு தரப்பும் திருப்தி தெரிவித்தன.

இரு நாடுகளும் மின்சார வலையமைப்பு இணைப்பு திட்டம், சம்பூர் சூரிய மின்சக்தித் திட்டம், திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆகியவற்றை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடின. மேலும், இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள (Sri Lanka Unique Digital Identity) திட்டத்திற்கான ஒப்பந்த நடைமுறைகளை விரைவில் நிறைவு செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

61.5 மில்லியன் அமெரிக்க டொலர் மானியத்தின் கீழ் காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவில் இறுதிப்படுத்தவும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட 1990 சுவ செரிய ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தையும் விரைவில் நிறைவு செய்யவும் இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தன.

மேலும், இந்தியப் பிரதமரின் கடந்த ஆண்டு விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சியின் கீழ், முதல் ஆண்டிலேயே பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட இலங்கை நிபுணர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்கான வீடமைப்புத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வரவேற்ற வெளியுறவுச் செயலாளர், 2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கான 10,000 வீடுகள் நிர்மாணத் திட்டம் உட்பட அந்த சமூகத்திற்கான திட்டங்களை விரைவுபடுத்துமாறு இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டார்.

பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது குறித்தும், இந்தியா–இலங்கை சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதையும் இரு தரப்பும் வரவேற்றன. தேவையான உள்நாட்டு நடைமுறைகள் நிறைவடைந்தவுடன் அந்த ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

விஜயத்தின் போது, மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடிய வெளியுறவுச் செயலாளர், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க இலங்கையின் ஒத்துழைப்பை கோரினார். இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தினார்.

அதேபோல், மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான உறுதிப்பாட்டை நடைமுறைப்படுத்தவும், தமிழர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கை அரசியலமைப்பின் ஏற்பாடுகளை முழுமையாக அமுல்படுத்தவும் இலங்கை அரசிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

மேலும், 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கிய, “இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக இலங்கைப் பகுதி எந்த வகையிலும் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்படாது” என்ற உறுதிமொழியை இந்தியா வரவேற்றதுடன், அது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் உறுதியான அடித்தளமாக அமையும் என தெரிவித்தது.

இந்திய வெளியுறவுச் செயலாளரின் இவ்விஜயம், 2024 டிசம்பரில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையிலும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.