வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

பாராளுமன்ற அமர்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் மேலதிக கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் பல்வேறு விடயங்களை விளக்கமாக எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற நேரக் கட்டுப்பாடு காரணமாக அமைச்சரின் ஒவ்வொரு பதிலுக்கும் தனித்தனியாக மேலதிக கேள்விகளை முன்வைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் தனது பதிலில் “அதியுயர் பாதுகாப்பு வலயம்” (High Security Zone) தொடர்பாக விளக்கமளித்திருந்தாலும், அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், யுத்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட பகுதிகளை தற்போதைய சூழ்நிலையில் அதே வகையில் தொடர வேண்டிய அவசியமில்லை என்பதே கலந்துரையாடப்பட்ட முக்கிய கருத்தாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் உள்ள சில மதத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என அமைச்சர் தெரிவித்திருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது. புனித செபஸ்தியார் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் உள்ளிட்ட பல இடங்களுக்கு பொதுமக்கள் இன்னும் செல்ல முடியாத நிலை தொடர்கிறது என்றும், புனித செபஸ்தியார் தேவாலயம் இருந்த இடமே தற்போது இல்லாத நிலையில் அங்கு வழிபடுவதற்கான வசதி உள்ளது எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக குறிப்பிட்டிருந்தாலும், காணி கோரி விண்ணப்பித்துள்ள 44 பேரில் 11 பேருக்கு மட்டுமே காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது காணி உரிமையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அணுகுமுறையாக இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் காணிகளை அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 80 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. உரிமையாளர்களின் அனுமதியின்றி தனியார் காணிகளில் இராணுவக் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்ட பின்னர், அந்தக் காணிகளை அரசிடம் ஒப்படைக்குமாறு கோருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என வலியுறுத்தப்பட்டது.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்குச் சொந்தமான அனைத்து தனியார் காணிகளும் எந்தவித நிபந்தனையும் இன்றி, தாமதமின்றி உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நீண்டகாலமாக நீடித்து வரும் காணிப் பிரச்சினைக்கு நீதி, சட்டம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வை அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்விகள்:
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகளின் மொத்த பரப்பளவு எவ்வளவு?

தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் விடுவிக்கப்பட்ட காணிகளின் பரப்பளவு, அமைவிடம் மற்றும் திகதிகள் என்ன?
இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் பரப்பளவு எவ்வளவு? அவற்றை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவரையறை என்ன?

வலிகாமம் வடக்கில் முழுமையாக விடுவிக்கப்படாத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் பொதுமக்களின் காணிகளை மீள வழங்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள மதத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்களின் காணிகளை மீட்டெடுக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, இரணைமடு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் சிவில் காணிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் என்ன?

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெளிப்படையான, சட்டபூர்வமான மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் தீர்வை அரசாங்கம் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.