4வது வெப்ப அலையின் முடிவில் சுவிட்சர்லாந்தை தாக்கும் கடும் இடியுடன் கூடிய மழை

 டிசினோ, ஷ்விட்ஸ் உள்ளிட்ட கான்டன்களுக்கு அதிக அபாயம்

இந்த ஆண்டின் நான்காவது கடும் வெப்ப அலையின் முடிவில், அடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சில இடங்களில் மிகக் குறுகிய நேரத்திலேயே அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால், இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகிறது.

காப்புறுதி நிறுவனமான AXA Switzerland-இன் சொத்து சேதப் பிரிவு தலைவர் ஸ்டீபன் முல்லர் தெரிவித்ததாவது, பெர்ன் கான்டனிலிருந்து ஏற்கனவே புயலால் ஏற்பட்ட சில சேதங்கள் பதிவாகியுள்ளன. அடுத்த சில நாட்களில் புயல் மற்றும் கனமழை காரணமான சேதங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆலங்கட்டி மழையால் அதிக பாதிப்பு – டிசினோ முதலிடம்

கடந்த 10 ஆண்டுகளின் காப்புறுதி தரவுகளின் அடிப்படையில், ஆலங்கட்டி மழையால் அதிக சேதம் ஏற்பட்டுள்ள கான்டன் டிசினோ ஆகும். அதனைத் தொடர்ந்து ஜூரா, நியூஷாத்தல், பெர்ன் மற்றும் நிட்வால்டன் ஆகிய கான்டன்கள் இடம்பெறுகின்றன.

ஆலங்கட்டி மழையால் வீடுகளின் கூரைகள், ஜன்னல் மறைப்புகள் (Lamellenstoren) மற்றும் வாகனங்கள் அதிகமாக சேதமடைந்துள்ளன. மறுபுறம் ஜெனீவா, துர்காவ் மற்றும் ஷாஃப்ஹௌசன் கான்டன்களில் ஆலங்கட்டி மழை சேதங்கள் மிகவும் குறைவாகப் பதிவாகியுள்ளன.

வெள்ளப்பெருக்கு அபாயம் – ஷ்விட்ஸ் முதலிடம்

வெள்ளப்பெருக்கால் அதிக சேதம் ஏற்பட்ட கான்டன்களில் ஷ்விட்ஸ் (Schwyz) முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சோலோதுர்ன், லூசேர்ன், ஷாஃப்ஹௌசன் மற்றும் ஆர்காவ் ஆகிய கான்டன்கள் வருகின்றன.

அதே நேரத்தில் நிட்வால்டன், வாட், பாசெல்-லாந்த், யூரி மற்றும் கிரௌபுண்டன் கான்டன்கள் கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கால் ஒப்பீட்டளவில் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்டீபன் முல்லரின் கூற்றுப்படி, வெள்ளத்தடுப்பு சுரங்கங்கள், நீர்த்தேக்கக் குளங்கள், அணைகளின் உயர்த்தல் மற்றும் தேசிய வெள்ள அபாய வரைபடம் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பல இடங்களில் சேதத்தை குறைக்க உதவியுள்ளன.

மின்னல் தாக்குதலில் டிசினோவுக்கு மிக அதிக அபாயம்

மின்னல் தாக்குதலால் ஏற்படும் சேதங்களிலும் டிசினோ கான்டன் சுவிட்சர்லாந்தில் முதலிடத்தில் உள்ளது. அங்கு மின்னல் தாக்கும் அபாயம் தேசிய சராசரியை விட எட்டு மடங்கு அதிகம் என AXA தெரிவித்துள்ளது.

பாசெல்-லாந்த், வாட் அல்லது ஜெனீவாவுடன் ஒப்பிடும்போது, டிசினோவில் இந்த அபாயம் 20 மடங்குக்கும் அதிகம் உள்ளது. இதற்குக் காரணம், மத்தியதரைக் கடலில் இருந்து வரும் ஈரப்பதமிக்க சூடான காற்று ஆல்ப்ஸ் மலைத்தொடரை மோதுவதால் உருவாகும் சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மேகங்களாகும்.

2026 – அதிக வெப்பமும் அதிக இயற்கை அனர்த்தங்களும்

2026 ஆம் ஆண்டு அதிக வெப்பம் பதிவான ஆண்டாக மட்டுமல்லாமல், இயற்கை அனர்த்தங்களால் அதிக சேதம் ஏற்பட்ட ஆண்டாகவும் வரலாற்றில் இடம்பெறலாம் என்று AXA எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 11,000 இயற்கை அனர்த்த சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஜூன் 9 அன்று டிசினோவில் ஏற்பட்ட கடும் ஆலங்கட்டி மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக சுவிட்சர்லாந்தில் இயற்கை அனர்த்தங்களின் முக்கிய காலம் செப்டம்பர் வரை நீடிப்பதால், இன்னும் பல சேதங்கள் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான இழப்பு

AXA நிறுவனத்தின் கணக்குப்படி, இயற்கை அனர்த்தங்களால் ஆண்டுதோறும் சராசரியாக 115 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான சேதம் வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஏற்படுகிறது.

2025 ஆம் ஆண்டில் இந்த இழப்பு 72 மில்லியன் பிராங்குகள் மட்டுமே இருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு 291 மில்லியன் மற்றும் 2023 ஆம் ஆண்டு 240 மில்லியன் பிராங்குகள் அளவுக்கு சேதம் பதிவாகியுள்ளது.

புயல்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது

கடந்த சில ஆண்டுகளாக புயல்கள் குறுகிய நேரத்தில் மிகவும் தீவிரமாக உருவாகி வருகின்றன என்று AXA தெரிவித்துள்ளது. பலத்த காற்று, அதிகளவு கனமழை மற்றும் பெரிய ஆலங்கட்டி மழை ஆகியவை குறிப்பிட்ட சிறிய பகுதிகளை மட்டுமே தாக்கினாலும், மிகப்பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் நிலை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.