டெங்கு கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவாக இந்தியா இலங்கைக்கு உதவி!

ஹஸ்பர் ஏ ஹலீம்-

இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு ஆதரவாக, 500 லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சர் கௌரவ டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களிடம் இன்று கையளித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் வழங்கிய அன்பளிப்பாக இந்த மருந்து இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனமான UPL Limited இந்த மருந்தை வழங்கியதுடன், கோரிக்கை விடுக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்தது. நெருக்கடி காலங்களில் முதன்முதலில் உதவி வழங்கும் நாடாக இந்தியா தொடர்ந்து செயல்படுவதை இது மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

. 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் சுமார் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். இந்த தொழில்நுட்ப மலத்தியோன், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பரவலான புகைமூட்டல் (Fogging) மற்றும் தெளிப்பு (Spraying) நடவடிக்கைகளுக்கு உதவியாக அமையும்.

நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இந்த மருந்துத் தொகுதியை விரைவாக வழங்குவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய இலங்கை சுகாதார அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட அனைத்து இலங்கை அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த முயற்சி, இந்தியா–இலங்கை இடையிலான மக்கள் மையப்படுத்தப்பட்ட நெருக்கமான கூட்டாண்மையின் மற்றொரு எடுத்துக்காட்டாகும். மேலும், இந்தியாவின் “Neighbourhood First” (அயல்நாடுகள் முதன்மை) கொள்கையின் கீழ் இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவை இது பிரதிபலிக்கிறது.