ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளை மேம்படுத்தலில் சமூக ஊடகங்களின் பங்கு தொடர்பில் விழிப்பூட்டும் செயலமர்வு!

Oplus_131072

அபு அலா

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வொன்று திருகோணமலை உப்புவெளி தனியார் விடுதியொன்றில் (01) நடைபெற்றது.

சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் “எனது இணையம் – எனது உரிமை” எனும் தொனிப்பொருளில் இந்த ஒருநாள் விழிப்புணர்வு செயலமர்வு நடாத்தப்பட்டது.

சமூகக் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த இச்செயலமர்வில் பிரதேச ஊடகவியலாளர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இச் செயலமர்வில், மனித உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு பற்றிய மிக முக்கியமான விடயங்கள் பற்றி தெளிவு படுத்தப்பட்டது.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மனித உரிமைகள், அது தொடர்பான சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் அவசியத்தன்மை குறித்தும், இணையவழி மோசடிகளைத் தடுத்தல் மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு பற்றிய வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.

மேலும் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அதிகார மட்டத்திற்கும், பொதுவெளிக்கும் கொண்டு செல்வது பற்றியும் ஆராயப்பட்ட அதேவேளை எதிர்காலத்தில் விளிம்பு நிலை மக்களின் உரிமைப் போராட்டங்களிலும், அவற்றுக்கான தீர்வு காண்பதிலும் சமூக ஊடகங்கள் எவ்வாறான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் ஆழமாக விவாதிக்கப்பட்டது.

இச்செயலமர்வு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வலிமைப்படுத்த சமூக ஊடகங்களை எவ்வாறு பொறுப்புடனும், திறம்படவும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு சிறந்த வழிகாட்டியாக அமையபெற்றதும் குறிப்பிடத்தக்கது.