( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு
கானகத்தினூடாக செல்லும் அடியார்களுக்கு மனிதாபிமான சேவையை ஒரு மருத்துவ குழு தொடர்ச்சியாக பல வருடங்களாக வழங்கி வந்தது.
உகந்தை மலை முருகன் ஆலயத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாவலடியில் சமுதாய சுகாதார விசேட வைத்திய நிபுணரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி அழகையா லதாகரன் தலைமையிலான மருத்துவசேவை அணியினர் இம்முறையும் இரண்டு வார காலம் அதே சேவையை செய்தார்கள்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், கொழுத்தும் வெயில், புழுதி, கரடுமுரடான பாதைகள் மற்றும் பல்வேறு இயற்கைச் சவால்களைத் தாண்டி வரும்போது உடல் சோர்வு, உளச்சோர்வு, கால்காயங்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் அவர்கள் நாவலடியை வந்தடைகின்றனர்.
அரசின் அனுமதியுடனும் பல்வேறு நலன்புரி பங்காளிகளின் ஒத்துழைப்புடனும், பல ஆண்டுகளாக நாவலடியில் மருத்துவ முகாமை அமைத்து பக்தர்களுக்கான அர்ப்பணிப்பு சேவையை தொடர்ந்து வழங்கப்பட்டது.
இவ் வாண்டு காட்டுப்பாதை திறக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜூலை 8 ஆம் திகதி நாவலடியில் முகாமிட்ட குழுவினர் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
பின்னர் 10.07.2026 அன்று காட்டுப்பாதை திறக்கப்பட்டதிலிருந்து, யாத்திரை நிறைவடைந்த 24.07.2026 வரை முழு இரண்டு வாரங்கள் இரவு பகலாக இடைவிடாத மருத்துவச் சேவையை அர்ப்பணிப்புடன் வழங்கினர்.
ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தொடர்ச்சியாக மருத்துவ சேவை வழங்கப்பட்டதுடன், மூலிகைத் தேநீர், சிற்றூண்டி போன்றவையும் வழங்கப்பட்டன.
இந்த மகத்தான பணியில் 15-க்கும் மேற்பட்ட சேவையாளர்கள் சுழற்சி முறையில் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டபோது, வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள், உயர் அதிகாரிகள், இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தன்னார்வமாக இணைந்து சேவையாற்றினர்.
பக்தர்கள் பயன்படுத்திவிட்டு வீசிச் செல்லும் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சமைத்துவிட்டு அணைக்கப்படாமல் விடப்படும் நெருப்பினால் காட்டிற்கு ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதேவேளை, ஒவ்வொரு காலையிலும் சேவையாளர்கள் தாமாக முன்வந்து அப்பகுதியை சுத்தம் செய்து சிரமதானப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் இராணுவத்தினரும் இணைந்து கழிவுகளை அகற்றி துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.


