மன்னார் பிரதேச சபை சில உறுப்பினர்கள் வெளிநடப்பு ஆழுமையற்ற தவிசாளரால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை.

( வாஸ் கூஞ்ஞ) 21.07.2026

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மன்னார் பிரதேச சபையை பொறுத்தமட்டில் தான்தோன்றி தனமாக செயற்படுவதாகவும் அபிவிருத்தி விடயத்தில் அக்கறையின்மையாக செயற்படுவதாகவும் தெரிவித்து தவிசாளரின் ஆட்சிக்கு ஆதரவு அளித்த உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உட்பட சிலர் 14வது அமர்வில் கலந்து கொண்ட பின் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

மன்னார் பிரதேச சபையின் 14வது மாதாந்த கூட்டம் இதன் தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஏ.ஜே.எம்.ஜப்ரான் தலைமையில் செவ்வாய் கிழமை (21.07.) காலை பத்து மணியளவில் நடைபெற்றது.

22 உறுப்பினர்கள் கொண்ட இச்சபையில் இன்றைய இக்கூட்டத்தில் 18 உறுப்பினர்களே கலந்து கொண்டனர். இக்கூட்டம் ஆரம்பிக்ப்பட்டு சற்று நேரத்தில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ஐந்து பேரும்- இலங்கை தொழிலாளர் கட்சியைச் சார்ந்த இரண்டு பேரும்- காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒருவரும் மற்றும் சுயேற்சை சார்ந்த ஒருவருமாக மொத்தமாக ஒன்பது உறுப்பினர்கள்; தாங்கள் இக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வதாக இதற்கான காரணத்தை தெரிவித்து விட்டு சபையிலிருந்து வெளி நடப்பு செய்தனர்.

மன்னார் பிரதேச சபை கூட்டங்களுக்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள போதும் இன்றையத் தினம் (21.07) செவ்வாய் கிழமை இச்சபை உறுப்பினர்கள் சிலர் சபையை விட்டு வெளிநடப்பு செய்கின்றார்கள் என செய்தியாளர்கள் அறிந்து அவ்விடத்திற்கு சென்றபோது வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும்போது

எங்கள் சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர் இன்றையத்தினம் நாங்கள் வெளிநடப்பு செய்யும் வரைக்கும் 18 உறுப்பினர்களே சமூகமளித்திருந்தோம். இதில் ஒன்பது உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். மிகுதி ஒன்பது உறுப்பினர்களே சபையில் அமர்ந்திருக்கின்றனர்.

இச்சபையின் தவிசாளர் உயர்மட்டங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்களிப்பு செய்வது மிகக் குறைவு அப்படி கூட்டங்களில் பங்களிப்பு செய்தாலும் எமது சபைக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை முன்வைப்பது கிடையாது.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் உறுபப்pனர்களின் கருத்துக்களை பெறாது மக்கள் நலன் நோக்காது ஒருதலைபட்சமான செயல்பாட்டையே மேற்கொள்ளுகின்றார்.

இச்சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒன்றுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவா கொண்டவர்கள். ஆனால் தவிசாளரின் தலைமைத்துவ பண்பும் ஆழுமையும் இல்லாமையால் சபையின் செயற்பாடு சீரழிந்து போகின்றது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் ஆட்சி அமைக்க நாங்கள் அவருக்கு ஆதரவு அளித்து அவரை ஆட்சி பீடம் ஏத்தினோம். ஆனால் 14 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இந்த தவிசாளரினால் இச்சபைக்கும் மக்களும் எந்தவித பிரயோசனத்தையும் நாம் காணவில்லை என வெளிநடப்பு செய்த ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் இவ்வாறு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.