மட்டக்களப்பில் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான இருநாள் நடமாடும் சேவை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி அவர்களின் பங்கேற்புடன் இன்று (17) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் இந்நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும் அவற்றை கையாள்வதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டல்களை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு இதன் போது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி காணி ஆணையாளர், மாகாண காணி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி நிர்வாகத்துடன் தொடர்புடைய திணைக்களங்களின் உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது பல ஆண்டுகள் தீர்க்கப்படாத காணிப்பிரச்சினை தீர்ப்பதற்கான குழு அமைக்கப்பட்டு காணி ஆணையாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.