கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நேற்று (14) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு, மண்முணைப்பற்று பிரதேச சபைக்குற்பட்ட செல்வா நகரில் 3.3 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய பாலத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் அனர்த்த காலங்களில் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் முகமாக கிராமிய பாலம் அமைக்கும் இத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முணைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ரோஹினி விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன், பாராளுமன்ற உறுப்பினர்களான இளைய தம்பி ஸ்ரீனாத், ஞான முத்து ஸ்ரீனேஸன் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.