சுகாதார அமைச்சினால் விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில், மாவட்ட தொற்றா நோய் தடுப்பு அதிகாரி டாக்டர் எம். ரூதேசன் ஏற்பாட்டில், பிராந்திய சுகாதார பணிமனையில் இன்று (06) இந்நிகழ்வு நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில், தேசிய விபத்துத் தடுப்பு ஆலோசனைக் குழு மற்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினரால் விபத்துக்களினால் பறிபோகும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்கீழ், ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் (ஜூலை 06) “வீதி விபத்துத் தடுப்பு தினமாக” அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் விபத்துக்களினால் ஆண்டுதோறும் சுமார் 300 தொடக்கம் 350 மரணங்கள் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரத் தரவுகளின்படி, விபத்துக்கள் காரணமாக 31,000 நபர்கள் உள்நோயாளிகளாகவும், 8,000-க்கும் மேற்பட்ட நபர்கள் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
தற்போது நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களில் கணிசமான சதவீதத்தினர் விபத்துக்களுக்குள்ளானவர்களே ஆவர். அவற்றுள்; தவறி விழுதல், வீதி விபத்துக்கள் , தீக்காயங்கள் ,மின் அதிர்ச்சி, வெட்டுக் காயங்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விலங்கு கடித்தல், வீட்டு விபத்துக்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
இவ்வாறான விபத்துக்களின் தாக்கத்தைக் குறைத்து, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக சுகாதார அமைச்சு பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






