எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் தலைமையில் இன்று (01) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம் பெற்றது.
நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையானது மாவட்டத்தில் நெல் கொள்வனவை மேற்கொண்டுகின்ற போதிலும் தனியார் அரிசியாலை உரிமையாளர்களும் அதிகளவில் நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை முன்னிட்டு மாவட்டத்தில் அரிசியாலை உரிமையாளர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்கள் பங்கேற்று சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெல் அறுவடையை உரிய முறையில் கொள்வனவு செய்வதற்கான நடைமுறைகள் குறித்தும் அரிசியாலை உரிமையாளர்களுக்கு வங்கிகளின் ஊடாக வழங்கப்படவுள்ள நிதி ஒத்துழைப்பு மற்றும் சலுகை விகள் அதற்கான வசதிகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது அரிசியாலை உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கவணம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், நெல் கொள்வனவு நடவடிக்கைகளை சீரான முறையில் முன்னெடுத்து, விவசாயிகளுக்கு உரிய காலப்பகுதியில் பயன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் அவசியத்தினை விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்


