மட்டக்களப்பில் இடம்பெற்ற மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பில் மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா இன்று (29) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணிகள் மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகாமையை வந்தடைந்ததும், அங்கிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரதான அரங்கிற்கு பண்ட் பாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து விசேட ஆராதனை வழிபாடுகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி உள்ளிட்ட மொடிஸ்த மிஷன் திருச்சபையின் கொடிகள் என்பன ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து மாணவர்களின் அழகிய வரவேற்பு நடனத்துடன் பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு திருமாவட்ட சபையின் அங்கமான, மட்டக்களப்பு மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு நகர் மற்றும் செங்கலடி பிராந்திய திருச்சபை மக்கள் இணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ளதுடன், குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் பேராயர் அருட்பணி எம்.டீ.கிங்ஸ்லி வீரசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் விசேட அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இரா.சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாநகர சபையின் பிரதி முதல்வர் வைரமுத்து டினேஸ்குமார், இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் முன்னால் தலைவர் டபிள்யு.பீ.எபனேசர் ஜோசப், இலக்கை மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் முன்னால் உப தலைவர் கே.ஜே.அருளானந்தன், மெதடிஸ்த மிடின் திருச்சபை பேரவையின் முன்னால் உப தலைவரும் திருகோணமலை வைத்தியசாலையின் முன்னால் பணிப்பாளருமான வைத்தியர் ஞானகுணாளன், கோட்டமுனை மெதடிஸ்த மிஷன் ஆலயத்தின் அருட்பணியாளர் அருள்நாதன் உள்ளிட்ட மெதடிஸ்த மிஷன் திருச்சபையின் அருட்பணியாளர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், சர்வமத தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், ஆசியுரை மற்றும் அதிதி உரைகள் என்பவற்றினை வழங்கியிருந்தனர்.

இதன் போது மிஷனரிமார்களின் தியாக வாழ்வு, ஆன்மீகப் பணி மற்றும் சமூகப் பணிகள் குறித்த விசேட கண்காட்சி ஒன்றும் காந்தி பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்காக இடம்பெற்றது.

இவ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் ஆன்மீகப் பணியோடு இணைந்து இந்நாட்டில் கல்வி மற்றும் சமூக மாற்றங்களை ஏற்படுத்திய மிஷனரிமார்களின் அளப்பரிய அர்ப்பணிப்பை நினைவுகூரும் இந்நாளில், சாதி, மத பேதமின்றி அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.