( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் வெளியான க. பொ. த. (சா/த) – 2025 பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் திருக்கோவில் கல்வி வலயம் மீண்டும் சாதனை படைத்துள்ளது.
இலங்கையில் தேசிய ரீதியில் உள்ள 100 கல்வி வலயங்களில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகளைக் கொண்ட திருக்கோவில் கல்வி வலயம் 4ஆம் இடத்தைப் பெற்று சிறப்பான சாதனையைப் பதிவுசெய்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் 3ஆம் இடத்தை பெற்றுள்ளதோடு, 33 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும், ஒரே ஒரு 9W பெறுபேறு மட்டுமே பதிவாகியுள்ளதால், கிழக்கு மாகாணத்தில் ஆகக் குறைந்த 9W பெறுபேறுகளைக் கொண்ட கல்வி வலயமாக திருக்கோவில் கல்வி வலயம் திகழ்வதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இவ்வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த வலயக்கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார், கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ. நசீர், ஏனைய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள், கல்விசாரா ஊழியர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கு
கல்விச் சமூகம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றது.
மேலும், கடந்த ஆண்டில் தேசிய ரீதியில் 5ஆம் இடத்தில் இருந்த திருக்கோவில் கல்வி வலயம், இவ்வாண்டு 4ஆம் இடத்துக்கு முன்னேறி, தனது கல்வித் தரத்தையும் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வருடத்தில் தேசிய ரீதியில் கண்டி, அக்கரைப்பற்று , கல்முனை ,திருக்கோ வில் , வலஸ்முல்ல ஆகிய வலயங்கள் முதல் ஐந்து இடங்களை கைப்பற்றி உள்ளன.
இலங்கையிலேயே எல்லா பாடங்களிலும் அல்லது எட்டு பாடங்களில் சித்தியடையத்தவறியோர் எண்ணிக்கையில் ஆகக் குறைந்த மூன்று பேர் இருப்பது திருக்கோவில் வலயத்தில் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



