தேர்தல் செலவின அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பொது மன்னிப்பு கோருகின்றனர்!

தேர்தல் பிரசார நிதிச் செலவின அறிக்கைகளை உரிய காலத்தில் சமர்ப்பிக்காத காரணத்தினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் சிலர், தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு அல்லது தங்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பிரசாரச் செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஏற்கனவே நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்துத் தவிசாளர் ரத்நாயக்க மேலும் விளக்குகையில் :

“தற்போது அந்தந்த மாவட்ட நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இன்னும் இந்த சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணைகளுக்காக அவர்கள் காலி, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தூர இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியுள்ளதால், வழக்குகளை வாபஸ் பெறுமாறு சிலர் எங்களைக் கேட்டுள்ளனர். மற்றொரு நபர் பொது மன்னிப்பு வழங்குமாறும் கோரியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரங்கள் அனைத்தும் சட்டத்தினால் நிர்வகிக்கப்படுவதால் எங்களால் அவ்வாறு செய்ய முடியாது.”

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களது செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மாத்திரமே தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக மட்டுமே எங்களால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே எடுத்துள்ளோம்.

சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் உள்ள குறைபாடுகள் அல்லது துல்லியமற்ற தன்மைகள் மீது ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்க முடியாது.

சட்டத்தின்படி, பொதுமக்கள் மட்டுமே அந்த அறிக்கைகளைப் பரிசீலித்து, அதில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் தங்களது நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட விரிவான பிரசாரச் செலவின அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.