தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) இன்று (21/06/2026) பிற்பகல் காலமானார்.
சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார்.
965 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்த இவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த இவர், ஊடகத் துறை மீது கொண்ட ஆர்வத்தால் பகுதிநேர ஊடகவியலாளராகத் தனது பணியைத் தொடர்ந்தார். ‘வீரகேசரி’ நாளிதழ் மற்றும் ‘தமிழ்நெட்’ இணையத்தளம் ஆகியவற்றில் பணியாற்றிய அவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் விளங்கினார்.
மறைந்த ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராக்கி), நாட்டுப்பற்றாளர் நா. சிவராம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், சண் தவராசா, வேதநாயகம், உதயகுமார் உள்ளிட்ட பல முக்கிய ஊடகவியலாளர்களுடன் இணைந்து இவர் களப்பணியாற்றியுள்ளார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார். இத்தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகளைப் பெற்று, வடகிழக்கிலிருந்து தெரிவான கூட்டமைப்பின் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அரசியல் ரீதியாகப் பல அச்சுறுத்தல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்ட இவர், மட்டக்களப்பிற்குச் செல்வதில் பலத்த முட்டுக்கட்டைகளைச் சந்தித்தார். இதன் உச்சக்கட்டமாக, 2006 ஆம் ஆண்டு யூலை மாதம் மட்டக்களப்பு, பூம்புகாரில் அமைந்திருந்த இவரது வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் ஆர்.பி.ஜி (RPG) எறிகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
இக்காலப்பகுதியில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் நோக்கில், ‘அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நூலையும் 2008 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். எனினும், தொடர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்குப் புலம்பெயர்ந்தார். லண்டனில் வாழ்ந்த காலத்தில், 2010 மே மாதத்தில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவாகி, பின்னர் அதிலிருந்து விலகியிருந்தார்.
அன்னாரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.


