நாட்டின் சில பகுதிகளில் இன்று (21) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும், முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அந்நேரங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பொதுமக்களும் கடற்றொழிலில் ஈடுபடுவோரும் வானிலை அறிவிப்புகள் தொடர்பில் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


