இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பயிர்க் காப்புறுதித் திட்டங்களை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை விரிவுபடுத்தியுள்ளது.
தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் வாழை உள்ளிட்ட முக்கிய பயிர்களுக்கும், நெற்செய்கைக்கும் இந்த காப்புறுதித் திட்டத்தினூடாகத் தனித்தனியாகப் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில், மிகக் குறைந்த மற்றும் சலுகை அடிப்படையிலான காப்புறுதிப் பிரீமியம் கட்டணங்களின் கீழ் இந்த வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் அனர்த்தங்களின் போது ஏற்படும் இழப்புகளுக்கு உரிய இழப்பீடுகளை விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காப்புறுதித் திட்டங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கு விவசாயிகள்,
விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் அந்தந்த மாவட்ட அலுவலகங்களைத் தொடர்புகொண்டு விபரங்களை அறியலாம்.
காப்புறுதிச் சபையின் உத்தியோகபூர்வ துரித தொலைபேசி இலக்கமான 1918 என்ற இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


