மட்டக்களப்பு – ஏறாவூரில் 16 வயதுடைய சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக மற்றுமொரு 16 வயது சிறுவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக ஏறாவூர் காவல்துறை பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு உறுதிபடுத்தினார்.
முன்னதாக, ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளில் இளம் வயதினரைக் கொண்ட குழுக்களுக்கிடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்துள்ளன.
இந்த பின்னணியில், பழிவாங்கும் நோக்கிலேயே, வீதியில் தனியாகச் சென்ற சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சம்பவத்துடன் தொடர்புடைய 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


