காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மின்னியலாக்கல் செயற்திட்டத்தின் தொடரும் வெற்றிப் படிகள்..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

அதில் ஒரு அங்கமாக (15) நேற்று காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ். சில்மியா அவர்களினால் இரண்டு செயலிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவு மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் எம். றஸுல்ஷா அவர்களினால் வடிவமைக்கப்பட்டு செயற்பாட்டுக்கு வருகின்ற நான்காவது செயற்திட்டமாக இது முன் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் தனது உரையில்; கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கணனிப்பிரிவின் அயராத முயற்சியினால் காத்தான்குடி மக்களின் நலன் கருதி சேவைகளை இலகு படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சேவை மிகவும் பொருத்தமானதும், பாராட்டுக்குரியதும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

குறித்த சேவையின் ஊடாக பொது மக்கள் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சேவைகளை அல்லது பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான முன்பதிவுகளை பெற்றுக் கொள்வதோடு காத்தான்குடி பிரதேச செயலக வெளியிடுகின்ற செய்திகளையும் மற்றும் அலுவலகம் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஏதேனும் முறைப்பாடுகள் பொதுமக்களுக்கு இருப்பின் அதனை நேரடியாக பிரதேச செயலாளருக்கு அனுப்புவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.dskattankudy.com என்ற இணையதள முகவரியின் ஊடாக பொதுமக்கள் குறித்த சேவையினை அணுக முடியும்.

அதே போன்று இத்தனை காலமும் நீண்ட காலதாமதங்களை ஏற்படுத்திய வியாபாரப் பெயர் பதிவினை இனிவரும் நாட்களில் இணையம் மூலமாக பொது மக்கள் தங்களது பதிவுகளை மேற்கொண்டு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்களை மிகவும் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கான சேவையை www.bnrdskky.com என்ற இணையதள முகவரி ஊடாக பொதுமக்கள் அணுக முடியும் என்பதனை பிரதேச செயலகம் கேட்டுக்கொள்கின்றது.