( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் கடலரிப்பு அண்மைக்காலமாக உக்கிரமடைந்துவருகின்றது.
ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்கு பிற்பாடு இது நடைபெறுவதாக பரவலாக கூறப்படுகின்றது.
அதேவேளை,அம்பாறை கடலோரப் பகுதிகளில் பாரிய கடலரிப்பை தடுக்கும் முகமாக பாரிய பாறாங் கற்களை இடுகின்ற அல்லது கல்லணை போடுகின்ற செயற்பாட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக காரைதீவிலே கடந்த ஏழு மாதங்களாக கரையில் குவிக்கப்பட்ட பாறாங்கற்கள் இன்னும் கடலுக்குள் இடப்படவில்லை.
அல்லது கல்லணை போடப்படவில்லை.
ஆனால், அருகில் இருக்கக்கூடிய நிந்தவூர் ,சாய்ந்தமருது ,கல்முனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் பாறாங்கற்கள் கடலில் போடப்பட்டுவிட்டது.
எனினும் காரைதீவில் அச்செயற்பாடு நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டும் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன்,
கடந்த வருடத்தில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், இந்த வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது பற்றி பிரஸ்தாபித்திருந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவிடமும் பல தடவைகள் இப் பிரச்சினை எத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி அம்பாறை மாவட்டத்திற்கு வருகைதந்த போதிலும் இப் பிரச்சினை பற்றி கூறப்பட்டுள்ளது.
ஆனால், இன்னமும் அந்த பாறாங் கற்கள் கரையிலேயே கிடப்பிலே கிடக்கின்றன.
அதேவேளை, காரைதீவு கடற்கரையை, கடல் நாளுக்கு நாள் சூறையாடிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவரும் பொதுமக்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.


