எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் இன்று (11) மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள், அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், முதலுதவி சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் நடைமுறைப் பயிற்சியும் இடம்பெற்றது.
மேலும், வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துதல், அவசரகாலத் தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் உயிர், சொத்து இழப்புகளை குறைப்பதன் அவசியம் குறித்து மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன் விளக்கமளித்தார்.
அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் டாக்டர் கு. நெடுஞ்செழியபல்லவன் தீ விபத்துகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துரையை வழங்கினார்.
நிகழ்வின் போது கலந்துகொண்ட வர்த்தகர்களுடன் திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது. அனைவரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பான மட்டக்களப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மாநகர சபை உறுப்பினர்கள், தீயணைப்பு பிரிவு உறுப்பினர்கள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பல வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


