யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கல்

ஹஸ்பர் ஏ.எச்-

2026 ஜூன் 02 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் மானியத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட நிதி உதவியை வழங்கினார். இத்திட்டம் 2025–26 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர், 2023–24 கல்வியாண்டில் இந்திய மானியத்தின் கீழ் ஒரு நிதி உதவித் திட்டம் பல்கலைக்கழகத்தில் செயல்படுத்தப்பட்டது. அதன் கீழ், பொருளாதார நிலை மற்றும் கல்வித் திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணவர்களுக்கு மாதந்தோறும் 5,000 இலங்கை ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இத்திட்டம் பயனுள்ளதாக இருந்ததாக கிடைத்த நேர்மறையான கருத்துக்களையும், பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் மாணவர்களும் இத்திட்டத்தைத் தொடருமாறு விடுத்த கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக மேம்படுத்தப்பட்ட நிதி உதவித் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்தும் என்று அறிவித்தார்.

மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், 2025–26 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் முதலாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் 100 பேருக்கு, மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் 7,500 இலங்கை ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். மேலும், இந்த உதவி அவர்கள் தங்களது கல்விக் கற்கைநெறி முடியும் வரை தொடர்ச்சியாக வழங்கப்படும். இதன் விளைவாக, திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நான்காவது ஆண்டில், பல்கலைக்கழகத்தில் மொத்தம் 400 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

நிகழ்வில் உரையாற்றிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், நிதி உதவி கல்விசார் முயற்சிகளை ஊக்குவிப்பதோடு, மாணவர்கள் தங்களது கல்வி, முன்னேற்றம் மற்றும் எதிர்காலம் போன்ற முக்கிய அம்சங்களில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகிறது என்று வலியுறுத்தினார்.

இந்த முயற்சி, இலங்கையின் கல்வித் துறையில் இந்தியா முன்னெடுத்து வரும் பல்வேறு கடந்தகால மற்றும் தற்போதைய அபிவிருத்தி கூட்டாண்மைத் திட்டங்களின் தொடர்ச்சியாகும். அவற்றில் சில முக்கியமான உதாரணங்கள்:

ருஹுண பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கத்தை நிறுவுதல்;

வட மாகாணத்தில் 79-க்கும் மேற்பட்ட பாடசாலைகளைப் புதுப்பித்தல்;

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு 110 பேருந்துகளை வழங்குதல்;

தென் மாகாணத்தில் 200 பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் கணினி ஆய்வகங்களை நிறுவுதல்;

வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவையில் பல இன, மும்மொழிப் பாடசாலை ஒன்றை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள்.

தற்போது, “9 தோட்டப் பாடசாலைகளின் தரமுயர்த்தல்” மற்றும் “தேர்ந்தெடுக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவுதல்” ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.