கடந்த 5 மாதங்களில் 80 சிறுவர் பாலியல் வழக்குகள் பதிவு!

ஊவா மாகாணத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 80 சிறுவர் பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 604 சிறுவர்கள் ஊவா மாகாணத்திலுள்ள 18 சிறுவர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் தீக்ஷனா எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெல்லவாய, மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த வருடத்திற்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 186 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

அவற்றில் 80 வழக்குகள் பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் தொடர்பானவை என்றும், 60 வழக்குகள் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் பொறுப்புரிமை தொடர்பானவை என்றும் ஆணையாளர் தீக்ஷனா எதிரிசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆபத்துக்களைக் குறைப்பதற்காக, பதுளையில் நேற்று விசேட பொது விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள ஏதுவாக பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ‘QR’ குறியீடு மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இவ்வேலைத்திட்டம் பதுளை தலைமையக காவல்துறைப் பரிசோதகர் சாணக்க சிரன்ஜீவ விஜேரத்ன மற்றும் ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சேனக பெர்னாண்டோ ஆகியோரின் பங்கேற்புடன், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் ஆதரவோடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

பெற்றோர்கள் உரிய பாதுகாப்பை வழங்கத் தவறுவதே பல சிறுவர்கள் ஆபத்துக்களை எதிர்கொள்ளக் காரணம் என ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.