இலங்கைக்கு வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை!

எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், நாளைய தினத்தில் வழமையான வானிலையே நிலவும் என்றும், மே 26 முதல் 28 வரையிலான நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கசுன் பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த நாட்களில் பெய்த பலத்த மழையினால் உயர்வடைந்திருந்த பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வழமைக்குத் திரும்பி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்றைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், களு கங்கையின் மில்லகந்தை பகுதியில் சிறியளவிலான வெள்ள நிலைமை நீடிப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் குறைவடைந்து வந்தாலும், தூனுமலே சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 7 ஆயிரத்து 482 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆயிரத்து 731 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், 836 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.