காப்பியநாயகி கற்புக்கரசி கண்ணகைத்தாயின் வைகாசி திருச்சடங்கு

வைகாசி பிறந்துவிட்டால் கிழக்கின் பட்டிதொட்டியெல்லாம் பறையொலி முழங்க, குழல்நய ஓசையெழுப்ப, வைகாசிப் பொங்கல் நடைபெறுவது வழமை.

கிழக்கில் பெரும்பாலான தமிழ்க்கிராமங்கள் இச்சடங்கினால் களைகட்டும்.

நாளை (25) திங்கட்கிழமை இவ்வைகாசித்திருவிழாச்சடங்கு பெரும்பாலான கண்ணகி ஆலயங்களில் ஆரம்பமாகிறது. ( சில இடங்களில் நாள்கள் மாறுபடலாம்)

வடக்கில் வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்திலும் இச்சடங்கு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

பூம்புகாரைத் தலைநகராகக்கொண்டு சோழ நாட்டிலே பிறந்து, பாண்டியநாட்டிலே அரசியல் புரட்சி செய்து, சேரநாட்டிலே தெய்வமாகிய கண்ணகை அம்பாள் சிங்கள மக்கள் மத்தியில் “பத்தினித்தெய்யோ” என இன்றும் வழிபட்டு வருவதைக் காணலாம்.

கண்ணகி வணக்கம் இலங்கையின் இரண்டு இனத்தாரிடையே (தமிழர் சிங்களவர்)வளர்க்கப்பட்டு வந்தது. கண்ணகை அம்மன் என்றும் “பத்தினி தெய்யோ” என்றும் வழங்கப்பட்டுவந்தது.

கண்ணகி தமிழரிடையே ஒரு புதுத்தெய்வமாக உருப்பெற்ற கதையை சிலப்பதிகாரம் சுவைபடக்கூறுகிறது.

வானோர் வடிவில் வந்த கோவலனோடு தெய்வ விமானமேறி கண்ணகி வானகம் சென்ற காட்சியைக் கண்ட வேடுவர்கள் அவளைத் தெய்வமாகப் போற்றினார்கள்.

‘சிறு குடியீரே சிறு குடியீரே …’.என்ற சிலப்பதிகார குன்றக்குரவைப் பாடலைப் பாடி வேங்கை மரத்தின் கீழ் எடுத்த முதற் சடங்கு கண்ணகி சடங்காகும்.
அதனையொட்டி கண்ணகி சடங்கு முறை வழக்கிற்குவந்தது.

சேரன்செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கங்கையில் நீராட்டி அக்கல்லிலிருந்து கண்ணகியின் சிலை வடித்து தனது தலைநகராம் வஞ்சிமாநகரில் அமைத்த ஆலயத்தில் பிரதிஸ்டை செய்தான்.அங்கு இந்திரவிழா எடுத்தான்.

இந்த விழாவிற்கு குடகக்கொங்கரும் மாளுவவேந்தனும் கடல்சூழிலங்கை கயவாகு வேந்தனும் வந்திருந்ததாக சிலப்பதிகாரம் கூறிநிற்கிறது.

இச் சிலப்பதிகாரத்தையும் பழைய ஏடுகளையும் வைத்து கிழக்கில் பல காப்பியங்களும் நூல்களும் வெளிவந்தன

கண்டி அரசன் இரண்டாம் இராசசிங்கன் காலத்தில் (1629-1637) பாடப்பெற்ற தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஊர்சுற்றுக் காவியத்தில் மட்டக்களப்புப் பிராந்தியத்தில் 30 கண்ணகை அம்மன் ஆலயங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.அவற்றில் அங்கணாமைக்கடவை (வெளியிலிருந்தும்) முதலூராகக் குறிப்படப்பட்டுள்ளது.எனவே அதுவே முதல் ஆலயமாகக் கொள்ளலாம்.

‘பட்டி நகர் தம்பிலுவில் வீரமுனை காரைநகர்
பவுசுபெறு கல்முனை கல்லாறெருவில் மகிளுர்
செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு
செல்வமுறு மகிழடித்தீவு முதலைக்குடா
அட்ட திக்கும் புகழும் வந்தாறுமூலை நகர்
மட்டவிழ் பூங்குழல் மண்முனைக் கண்ணகையை மனதில் நினைக்க வினை மாறி ஓடிடுமே.’

என ஊர்சுற்றுக்காவியம் கூறுகிறது.

வைகாசிப் பொங்கல் வைகாசி சடங்கு குளுத்தி குளிர்த்தி குளிர்ச்சி என்றெல்லாம் சொல்லப்படும் இச் சடங்கு பயபக்தியுடன் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெறுவது அம்மனின் அருட்கடாட்சமே எனலாம்.
இக் காலகட்டத்தில் முழுக் கிராமமே பக்திப் பரவசத்தில் ஊறி இருக்கும். புலால் மறுப்பார்கள் , மஞ்சள் தட்ட மாட்டார்கள்,நல்ல கெட்ட நிகழ்வுகள் எதுவுமே நடைபெறமாட்டாது.

மற்றைய ஆலயங்களில் நடைபெறும் பூசைகளைப் போலன்றி, இங்கு ‘சடங்கு’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது அதன் தனித்துவத்தைக் காட்டுகிறது. கயவாகு மன்னன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் பேழைகள் (பெட்டகங்கள்) ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ‘கதவு திறத்தல்’ நிகழ்வுடன் விழா களைகட்டும். இதில் ‘காப்புக்கட்டியவர்கள்’ எனப்படும் பூசகர்கள் தூய்மை பேணி, சிலப்பதிகாரக் கதையை மையமாகக் கொண்ட ‘ பாடல்களை’ இசைப்பார்கள். பக்திப் பாடல்களோடு சேர்த்து உடுக்கை அடித்து, கண்ணகியின் வரலாற்றைக் கூறும் வசந்தன் பாடல்கள் பாடப்படுவது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

கண்ணகி எனும் பத்தினித் தெய்வ வழிபாட்டின் பின்னணியில் ஆழ்ந்த சமூக நன்மைகளும் நம்பிக்கைகளும் புதைந்துள்ளன. வெப்பம் மிகுந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் அம்மை, தட்டம்மை போன்ற தொற்றுநோய்களை ‘அம்மன் அருள்’ அல்லது ‘வெப்ப நோய்கள்’ என்று மக்கள் கருதுகின்றனர்.

கண்ணகியின் சினம் தணிந்து குளிர்ந்தது போல, தம் ஊரையும் தங்களையும் நோய்களிலிருந்து அவள் காக்க வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும். இதனாலேயே சடங்கின் இறுதியில் ‘குளிர்ச்சி பாடுதல்’ என்னும் நிகழ்வு மிக முக்கியத்துவம் பெறுகிறது.

மஞ்சளும் வேப்பிலையும் கலந்த நீரால் அம்மனைத் துதித்து குளிர்விப்பதன் மூலம் ஊரில் மழை பெய்து, செழிப்புற்று, நோய்கள் நீங்கும் என்பது மக்களின் அசையாத நம்பிக்கையாகும். மேலும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த கண்ணகியை வழிபடுவதன் மூலம் சமூகத்தில் அறம் தழைக்கும் என்பதும், பெண்களுக்குக் கற்பின் வலிமையை அது பறைசாற்றுவதாகவும் அமைகிறது.

இத்திருச்சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் கலை நிகழ்ச்சிகள் மட்டக்களப்பின் நாட்டுப்புறக் கலைகளுக்கு உயிர் கொடுக்கின்றன. ‘வசந்தன் கூத்து’ போன்ற கலை வடிவங்கள் கண்ணகி விழாக்களோடு பின்னிப் பிணைந்தவை. சிறுவர்களும் பெரியவர்களும் இணைந்து ஆடும் இந்த ஆட்டம், கிராமிய இசையோடு சேர்ந்து பக்தியைப் பரவச் செய்கிறது.

மேலும், ‘மடை பரவுதல்’ போன்ற நேர்த்திக் கடன்கள் மற்றும் அன்னதான நிகழ்வுகள் ஊர் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகின்றன. சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்கும் இந்தக் காலப்பகுதி, கிழக்கு மாகாணத்தின் கலாசார விழுமியங்களை உலகுக்குப் பறைசாற்றுகிறது.

இவ்வாறு, சிலப்பதிகாரக் காப்பிய நாயகியாகத் தோன்றி, பத்தினித் தெய்வமாகப் பரிணமித்து, இன்று ஈழத்து மண்ணின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் கண்ணகியின் வழிபாடு, காலவோட்டத்தில் அழியாத ஒரு பண்பாட்டுச் சொத்தாகத் திகழ்கிறது.

அப்படிப்பட்ட திருக்குளிர்த்தி வைபவம் சிறப்பாக நடைபெற அம்மனை இறைஞ்சுவோமாக.

விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்