நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வானிலை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (21) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், வட மாகாணத்திலும் அனுராதபுர மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கிப்படுகிறது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 35-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


