சுற்றுலா பயணிகளுக்கான விசா-இல்லா நுழைவு கால அவகாசத்தை தாய்லாந்து அரசாங்கம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
2024 ஜூலை முதல் நடைமுறையில் இருந்த 60 நாள் விசா சலுகை இனி மாற்றியமைக்கப்பட உள்ளது.
இனி சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சம் 30 நாட்கள் மட்டுமே விசா இன்றி தங்க முடியும்.
சில குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த அனுமதி 15 நாட்களாகக் குறைக்கப்படலாம்.
தரைவழி எல்லைகள் வழியாக ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விசா-இன்றி நுழைய முடியும் என்ற பழைய கட்டுப்பாடு மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
விசா சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருத்தல், போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் அனுமதியின்றி தொழில்களில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ரச்சடா தனடிரெக் தெரிவித்துள்ளார்.
“சுற்றுலாத் துறை முக்கியமானது என்றாலும், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது. உண்மையான சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாட்கள் போதுமானது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மாற்றம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


