உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல், உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.
அதனை தொடர்ந்து, முற்பகல் 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முற்பகல் 10.29 க்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 10.30 க்கு இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, முற்பகல் 10:31 க்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.
இந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பெருந்திரளான உறவுகள் இன்றைய நினைவேந்தலில் கலந்துக் கொள்வார்கள் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அநீதிக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும், உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலைக் கடந்து தமிழ்த்தேசமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அணி திரண்டு எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துமாறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு கோரிக்கை விடுத்துள்ளது.


