பட்டிருப்பு: சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு; கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு!

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு விழாவும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பின்தங்கிய பிரதேச பாடசாலைகளின் பௌதிக வளங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், இப்பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்த புதிய வகுப்பறைத் தொகுதியானது, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் வரதராஜனின் துணைவியார் திருமதி வரதராஜன் வேணுகா அவர்களின் முயற்சியினால், சுவீடன் நாட்டில் வசிக்கும் மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலையின் முன்னாள் முகாமையாளர் வடிவேல் சந்திரகுமார் அவர்களின் முழுமையான நிதி அனுசரணையில் இப்புதிய வகுப்பறைத் தொகுதி கட்டடமாக உருப்பெற்றது.

பாடசாலை அதிபர் ரி. திருவருட்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கோட்டைக் கல்வி அதிகாரி எஸ். ஜமுனாகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய வகுப்பறைத் தொகுதியை நாடாவை வெட்டி, உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இதேவேளை, இப்பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரை கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சீருடைகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. சுவீடன் நாட்டில் வசிக்கும் யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜதுரை குலேந்திரராஜா அவர்களின் 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது நிதி அனுசரணையின் கீழ் இவ்வுதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளுடன் கோலாகலமாக நடைபெற்ற இந்நிழ்வில், வலயக் கல்வி அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், நிதியுதவி வழங்கிய சந்திரகுமார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவரது நண்பரும் முன்னாள் பொதுச் சுகாதார உத்தியோகத்தருமான எஸ். எம். முனாபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.