ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

கற்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, மாதம்பை பகுதியில் மற்றொரு பேருந்தை மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநருக்கு எதிராகக் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணொளியில் காட்டப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல்களை அவதானித்த மாதம்பை காவல்துறை அதிகாரிகள், அன்றைய தினமே பேருந்தை மறித்து ஓட்டுநருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

அத்துடன், அவரது ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு, தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

பேருந்தில் அதிகளவிலான பயணிகள் இருந்தமையைக் கருத்திற்கொண்டு, அன்றைய தினம் பேருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
எனினும், நேற்று மாதம்பை காவல்துறை நிலையத்தில் முன்னிலையாகுமாறு ஓட்டுநருக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி நேற்று காவல்துறை நிலையத்தில் முன்னிலையான ஓட்டுநர், போதைப்பொருள் பாவனை செய்துள்ளாரா என்பதைக் கண்டறிய சிலாபம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அத்துடன்,அவருக்கு எதிராக அஜாக்கிரதையாகவும் சட்டவிரோதமாகவும் வாகனம் ஓட்டியமைக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக,சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அதிவேகமாக வந்த பேருந்துடன் மோதாமல் இருக்க சிற்றூந்து ஒன்று விலகிச் செல்ல முயன்றபோது, ஒரு பெண் மற்றும் குழந்தை உட்பட மூவர் பயணித்த உந்துருளி விபத்துக்குள்ளாவதைக் காண முடிகிறது.

இதில் காயமடைந்தவர்கள் சிறு காயங்களுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளதுடன், இதுவரையில் மாதம்பை காவல்துறை நிலையத்தில் இது குறித்து எவ்வித முறைப்பாடும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது