கொட்டித் தீர்க்கபோகும் கன மழை

தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தொகுதியின் செல்வாக்கினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.