நாட்டுக்கு அந்நியச் செலாவணி கொண்டுவரும் புலம்பெயர் ஊழியர்களின் பிரச்சனைகள்..! தீர்க்கப்படுமா..

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்ட அதிகாரத்துடன் கூடிய
தனிப்பட்ட அலகொன்றை நிறுவுதல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான
விவாதத்தில் உரையாற்றிய போது, வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்லும்
இலங்கை மக்களின் துயரமான நிலைகள் குறித்து பல முக்கிய விடயங்கள்
எடுத்துரைக்கப்பட்டன.

Aadujeevitham (தி கோட் லைஃப்) என்பது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் ஒரு
இளைஞனின் துயரமான வாழ்க்கையை எடுத்துக்கூறும் உணர்ச்சிப்பூர்வமான
திரைப்படமாகும். இதில் வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களின் வாழ்கையில்
நட்டக்கும் விடையங்கள் மிக தெளிவாக காட்டப்படுள்ளது. அது போலத்தான்
எம்மவர்களின் நிலைமையும் காணப்படுகின்றது.

இந்த நாட்டில் வாழ்வாதார சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள்,
வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் சமூக பாதுகாப்பின்மை போன்ற பல்வேறு
இன்னல்களை எதிர்கொண்ட பின்னரே பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தங்கள்
குடும்பங்களை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு
தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப்
பகுதிகளில் வாழும் மக்கள் மிகக் கடுமையான பொருளாதார சிரமங்களின்
காரணமாகவே மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு
தொழிலுக்காகப் புலம்பெயர்கிறார்கள்.

“ஆடு ஜீவிதம்” எனும் திரைப்படம், தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு
செல்லும் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எதிர்கொள்ளும் மனிதாபிமானமற்ற
சூழல்கள், ஏமாற்றங்கள் மற்றும் துன்பங்களை மிகவும் உணர்ச்சிகரமாக
சித்திரிக்கிறது. ஆனால் அது ஒரு திரைப்படக் கற்பனை மட்டும் அல்ல;
இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளுக்கு செல்லும் பல தொழிலாளர்கள் அத்தகைய
கொடுமைகள் மற்றும் சிக்கல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது மிகவும்
வேதனையான உண்மையாகும்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும்பாலும் பொருளாதார
வசதியுள்ளவர்களே செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். ஆனால் எமது நாட்டின்
சாதாரண மக்கள், குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில்
வாழும் மக்கள், இந்த நாட்டில் வாழ முடியாத சூழ்நிலை உருவான பின்னரே
தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெளிநாடுகளுக்கு செல்ல
வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தொழிலுக்காக வெளிநாடு
செல்லும் குடும்பங்களின் பெற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் “அஸ்வெசும”
போன்ற சமூக நலத்திட்ட கொடுப்பனவுகள் கூட இரத்து செய்யப்படும் நிலை
காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயகும்.

எனவே, வெளிநாட்டு தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சட்ட
உதவிகளை உறுதிப்படுத்தும் வகையில் சட்ட அதிகாரத்துடன் கூடிய விசேட
அலகொன்றை அரசாங்கம் அவசரமாக நிறுவ வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுலா
விசாவில் சென்று தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்பதற்கான அடிப்படை
அறிவு கூட சிலருக்கு இல்லாத நிலை உள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு பல
போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர், குறிப்பாக பெண்கள் பல்வேறு
சுரண்டல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகுகின்றனர். விசா
காலம் முடிவடைந்த பின்னரும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தொழிலில்
ஈடுபடுத்தப்படுகிறார்கள். சிலர் உடல் மற்றும் மன உளைச்சல்களுக்கு
ஆளாகின்றனர். சம்பளங்கள் வழங்கப்படாமை, பாஸ்போர்ட்கள் பறிமுதல்
செய்யப்படுதல், தங்குமிட சிக்கல்கள் மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலை
போன்ற பல பிரச்சினைகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.

இந்த நாட்டில் போதுமான பொருளாதார வாய்ப்புகளும் நிலையான வாழ்க்கைச்
சூழலும் இல்லாத காரணத்தால்தான் எமது இளைஞர், யுவதிகள் கட்டார், டுபாய்,
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்கிறார்கள்.
அவர்கள் தங்கள் குடும்பங்களின் எதிர்காலத்திற்காக உயிரை பணயம் வைத்து
அந்நிய நாட்டில் உழைக்கின்றனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாகவும்
மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படை உத்தரவாதத்தைக் கூட நாம் முழுமையாக
வழங்க முடியாத நிலை தொடர்கிறது.

இந்த நாட்டில் பொருளாதார மேம்பாட்டுடன் மக்கள் வாழக்கூடிய சூழலை
உருவாக்குவதில் மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தோல்வியடைந்துள்ளோம் என்பதை
ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குறைந்தபட்சம் வெளிநாடுகளுக்கு
செல்லும் எமது மக்களின் உயிர் பாதுகாப்பையும் மனித உரிமைகளையும்
உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நாடு இன்னும் முழுமையாக வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிடவில்லை.
தற்போதைய பொருளாதார நிலைமை வெளிநாட்டு வருமானங்களின் மீதே பெரிதும்
தங்கியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கைத்
தொழிலாளர்கள் அனுப்பும் பணமே நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக
இருந்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் வாழும் சில இலங்கை இளைஞர்கள் மனஅழுத்தம்
மற்றும் பல்வேறு துயரங்களின் காரணமாக உயிரிழந்த சம்பவங்களும்
பதிவாகியுள்ளன. அவர்களின் உடல்களை கூட தாய்நாட்டிற்கு கொண்டு வருவதில்
குடும்பங்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றன. இது மிகவும்
மனிதாபிமானமற்ற மற்றும் வேதனையூட்டும் நிலையாகும்.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து
பிரச்சினைகளையும் அரசாங்கம் விசேட கவனத்துடன் அணுக வேண்டும். போலி
முகவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு முன் விழிப்புணர்வு மற்றும்
சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களின் பாதுகாப்பு,
உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டு திட்டங்கள்
உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.