ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்துடன் நேரடியாக
தொடர்புடைய கோரிக்கைகள். தொடர்பாக இன்றைய தினம் 07.05.2025
பாராளுமன்றத்தில்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுத் தலைவராகவும் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினராகவும் நான், 2026 ஆம் ஆண்டு மே மாதம் 06 ஆம் திகதி
நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும்
உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சரிடம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச
ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகளை
முன்வைத்திருந்தேன்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையிலும், பல வருடங்கள் அரச சேவையில்
பணியாற்றிய ஓய்வூதியதாரர்கள் பல்வேறு சிரமங்களையும் நிர்வாக
சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு முதலில்
இலங்கையில் தற்போது ஓய்வூதியம் பெறும் நபர்களின் மொத்த எண்ணிக்கை என்ன
என்பதையும், ஓய்வூதியம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் செலவிடும்
மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும் கேட்டிருந்தேன்.
அதன்பின்னர், ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தும் இதுவரை
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளாதவர்களின் எண்ணிக்கை என்ன, மேலும் நிலுவையில்
உள்ள ஓய்வூதியத் தொகைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளவர்களின் எண்ணிக்கை
எவ்வளவு என்பதையும் அறிய விரும்பினேன். ஏனெனில் பலர் தங்களுக்குரிய
உரிமைகளைப் பெறுவதற்காக நீண்டகாலமாக காத்திருக்க வேண்டிய நிலை
உருவாகியுள்ளது.
ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு கடைசியாக
எப்போது இற்றைப்படுத்தப்பட்டது என்பதையும் நான் கேட்டிருந்தேன்.
காலத்திற்கேற்ற வகையில் நடைமுறைகள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது
மக்களுக்கு தேவையற்ற சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், ஓய்வூதியத்
தொகையிலிருந்து அறவிடப்படும் வருமான வரி தொடர்பாக எளிய மற்றும் தெளிவான
நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த முடியுமா என்றும் கேட்டிருந்தேன். தற்போதைய
பொருளாதார நெருக்கடியில் வாழும் ஓய்வூதியதாரர்களுக்கு மேலதிக வரிச்சுமை
ஏற்படுவது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் ஓய்வூதிய
கொடுப்பனவுகள் மீதான வரியை நீக்கி அதற்கு மாற்று நடைமுறைகளை அரசாங்கம்
பரிசீலிக்க வேண்டுமெனவும் நேரடியாக அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.
அதேபோன்று, அரச ஊழியர்களிடமிருந்து அறவிடப்படும் விதவைகள் மற்றும்
அநாதைகள் பங்களிப்புத் தொகைகள் தொடர்பாக முறையான நடைமுறையொன்றை
உருவாக்கி, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகித்து, பங்களிப்புச்
செய்பவர்களுக்கு உரிய பிரதிபலன் கிடைக்கக்கூடிய அமைப்பை உருவாக்க
முடியுமா என்றும் கேட்டிருந்தேன்.
10 வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலத்தைக் கொண்ட அரச ஊழியர்கள் தற்போது
தனிப்பட்ட ரீதியில் அமைச்சரவை அனுமதி பெற்ற பின்னரே ஓய்வூதியம் பெற
வேண்டிய நிலை காணப்படுகிறது. இது மிகவும் சிக்கலான மற்றும் காலதாமதமான
நடைமுறையாக உள்ளது. எனவே 10 வருடங்களுக்கும் குறைவான சேவைக்காலம் கொண்ட
அனைத்து அரச ஊழியர்களுக்கும் பொதுவான நடைமுறையின் கீழ் ஓய்வூதியம்
பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையை உருவாக்க முடியுமா என்றும், இந்த அதிகமான
காலதாமதத்திற்கான காரணம் என்ன என்றும் கேட்டிருந்தேன்.
ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெறும் நேர்முகப் பரீட்சைகள் மற்றும் ஆவணச்
சரிபார்ப்பு நடவடிக்கைகளின் போது தமிழ் மொழி பேசும் ஓய்வூதியதாரர்கள்
எதிர்கொள்ளும் அசௌகரியங்களையும் சபையில் சுட்டிக்காட்டினேன். தமிழ்
மொழியில் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமை, தேவையான ஆவணங்களின்
பட்டியல் SMS மூலம் அறிவிக்கப்படாதமை, மாவட்ட மட்டங்களில் நேர்முகப்
பரீட்சைகள் நடத்தப்படாதமை போன்ற காரணங்களால் தூரப் பகுதிகளில் வசிக்கும்
ஓய்வூதியதாரர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தப்
பிரச்சினைகளுக்கு துரிதமான மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை
எடுக்க முடியுமா என்றும் கேட்டிருந்தேன். அதேபோன்று, ஓய்வூதியதாரர்கள்
ஆவணச் சரிபார்ப்பிற்காக வரும்போது அவர்களை இன்முகத்துடன் வரவேற்று,
அவர்கள் நாட்டிற்காக ஆற்றிய சேவைக்கு மதிப்பளிக்கும் வகையில் உரிய
உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட
வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
இதனுடன் சேர்த்து, நாட்டில் நீண்டகால நிதி நிலைத்தன்மையை
உறுதிப்படுத்தும் வகையில் ஓய்வூதிய நிதியம் ஒன்றை உருவாக்க முடியுமா
என்பதையும் அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.
மேலும், சாதாரண கால சேவையில் இருந்து பின்னர் நிரந்தர சேவைக்குள்
உள்ளீர்க்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்படாத
பிரச்சினை தொடர்பாகவும் நான் கேள்வி எழுப்பினேன். இந்த பிரச்சினைக்கு
தீர்வு காணும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும்
கேட்டுக்கொண்டேன்.
எனினும், நான் சபையில் எழுப்பாத சில கேள்விகளுக்கு அமைச்சர்
பதிலளித்திருந்த போதிலும், நான் நேரடியாக முன்வைத்த முக்கியமான
கேள்விகளான ஓய்வூதிய வரி நீக்கம், ஓய்வூதிய நிதியம் உருவாக்கம் மற்றும்
நிரந்தர சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட ஊழியர்களின் ஓய்வூதிய பிரச்சினை
தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
எனவே, ஓய்வூதியதாரர்கள் மற்றும் அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்துடன்
நேரடியாக தொடர்புடைய இந்த முக்கியமான கேள்விகளுக்கு அமைச்சர் தெளிவான
பதில்களை வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.


