மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற மகுடிக் கூத்து நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அருகி வரும் தமிழர் பாரம்பரிய கலாசார கலைகளை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்கத்துடனும் இளம் சமூகத்தின் மத்தியில் அக் கலைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மகிடிக் கூத்துப் பெருவிழா இன்றைய தினம் 03.05.2026 வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக உடையார், பொலிஸ், விதானையார் போன்ற வேடங்களுடன் அண்ணாவிமார்களின் வரவேற்புடன் மகுடிக் கூத்து கலைஞர்கள் கூத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து பிராமணர்கள், காமாட்சி, மீனாட்சி மற்றும் குறவர்கள், எரிமுனி, வோதசடாமுனி, குருமுனி உள்ளிட்ட பல வேடங்கள் பூண்டு குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த மகுடிக் கூத்தானது வந்தாறுமூலையைச் சேர்ந்த திரு.சு. சுகுமார் அவர்களின் தலைமையிலும் சமூக ஆர்வலர்களின் ஒழுங்கமைப்பிலும் அண்ணாவிமார்கள் ஆகியோரது வழிகாட்டலிலும் நடைபெற்றது.

குறிப்பாக கிராமத்தில் மக்களுக்கு காய்ச்சல், அம்மை நோய் தாக்காமலே இந்த மகுடிக் கூத்து செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.பிரபாகரன், அரச அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊர் பிரமுகர்கள்​ உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.